
ரஞ்சி கோப்பையில் தனது முதல் ஆட்டத்தில் 111 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது தமிழக அணி.
குஜராத் மாநிலம் வல்சாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் குஜராத் அணி 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக உமாங் குமார் 3 சிக்சர், 11 பவுண்டர்களுடன் 76 ரன்கள் அடித்தார். தமிழக அணி தரப்பில் மொஹம்மது 5 விக்கெட்டுகளையும், சந்தீப் வாரியர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன் பிறகு முதல் இன்னிங்ஸை விளையாடிய தமிழக அணி 250 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சில் அசத்திய மொஹம்மது பேட்டிங்கிலும் அதிகபட்சமாக 85 ரன்கள் குவித்தார்.
14 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய குஜராத் அணி 312 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக உமாங் குமார் 12 பவுண்டர்களுடன் 89 ரன்கள் அடித்தார். தமிழக அணி தரப்பில் அதிகபட்சமாக சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து தமிழக அணிக்கு 299 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 2-வது இன்னிங்ஸில் தமிழக அணியால் 187 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக கேப்டன் சாய் கிஷோர் 48 ரன்கள் எடுத்தார். அர்சான் நக்வஸ்வாலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் அணி. தமிழக அணி அடுத்த ஆட்டத்தில் திரிபுராவை ஜன.11 அன்று எதிர்கொள்கிறது.