பிளே ஆஃப் சுற்றில் குஜராத், ஆர்சிபி, பஞ்சாப்!

பிளே ஆஃப் சுற்றுக்குள் நான்காவதாக நுழையப்போகும் அணி எது என்பதில் மும்பை, தில்லி, லக்னௌ இடையே கடும் போட்டி.
பிளே ஆஃப் சுற்றில் குஜராத், ஆர்சிபி, பஞ்சாப்!
1 min read

ஐபிஎல் 2025 பிளே ஆஃப் சுற்றுக்குள் குஜராத் டைடன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நுழைந்துள்ளன.

ஐபிஎல் 2025 போட்டி தற்காலிக நிறுத்தத்துக்குப் பிறகு சனிக்கிழமை தொடங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளே ஆஃப் வாய்ப்பை ஏற்கெனவே இழந்திருந்தன.

இந்தச் சூழலில் தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சனிக்கிழமை மோதவிருந்தன. மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இதன்மூலம், 17 புள்ளிகளை அடைந்த ஆர்சிபி பிளே ஆஃப் சுற்றை நெருங்கியது. 12 புள்ளிகளை அடைந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. பிளே ஆஃபிலுள்ள 4 இடங்களுக்கு 6 அணிகள் போட்டியில் இருந்தன.

இந்த நிலையில் தான் ஞாயிற்றுக்கிழமை இரு ஆட்டங்கள் நடைபெற்றன. மாலையில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை பஞ்சாப் கிங்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம், 17 புள்ளிகளை அடைந்தது பஞ்சாப் கிங்ஸ். இரவில் நடைபெற்ற ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைடன்ஸ். இதன்மூலம், 18 புள்ளிகளைப் பெற்ற குஜராத், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

அடுத்தடுத்து கிடைத்த இந்த முடிவுகளால் பிளே ஆஃப் சுற்றுக்குள் தற்போது குஜராத் (18), ஆர்சிபி (17), பஞ்சாப் (17) ஆகிய மூன்று அணிகள் நுழைந்துவிட்டன. முதலிரு இடங்களைப் பிடித்து குவாலிஃபையர் 1-ல் விளையாடப்போவது யார் என்பது தான் இவர்களுக்கிடையிலான அடுத்த போட்டி.

பிளே ஆஃப் சுற்றுக்குள் நான்காவதாக நுழையப்போகும் அணி எது என்பதில் மும்பை இந்தியன்ஸ், தில்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

  • 14 புள்ளிகளுடன் உள்ள மும்பை இந்தியன்ஸுக்கு இரு ஆட்டங்கள் மீதமுள்ளன.

  • 13 புள்ளுகளுடன் உள்ள தில்லி கேபிடல்ஸுக்கு இரு ஆட்டங்கள் மீதமுள்ளன.

  • 10 புள்ளிகளுடன் உள்ள லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு மூன்று ஆட்டங்கள் மீதமுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in