
ஐபிஎல்-ன் இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைடன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் போட்டியில் இன்றைய ஆட்டம் ஹைதராபாதில் நடைபெற்றது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஷுப்மன் கில் ஆடுகளம் பேட்டிங்குக்கு சற்று சாதகமானதாக இருக்காது என்பதால் பந்துவீச்சைத் தேர்வு செய்வதாகக் குறிப்பிட்டார். குஜராத்தில் ஏற்கெனவே சாய் சுதர்சன், ஷாருக்கான், சாய் கிஷோர் என மூன்று தமிழர்கள் உள்ள நிலையில், நான்காவது தமிழராக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார். குஜராத்தில் வாஷிங்டன் சுந்தருக்கு இது அறிமுக ஆட்டம்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு இந்த முறையும் தொடக்க பேட்டர்கள் ஏமாற்றமளித்தார்கள். முஹமது சிராஜ் வீசிய முதல் ஓவரில் டிராவிஸ் ஹெட் இரு பவுண்டரிகளை அடித்தாலும், கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இஷாந்த் சர்மா நிறைய ரன்களை கொடுத்தாலும், பவர்பிளேயில் மூன்றாவது ஓவரை வீசிய சிராஜ், அபிஷேக் சர்மாவையும் வீழ்த்தினார். 6 ஓவர்களில் சன்ரைசர்ஸ் 45 ரன்கள் எடுத்தது. இஷான் கிஷனும் 17 ரன்களுக்கு பிரசித் கிருஷ்ணா வேகத்தில் வீழ்ந்தார்.
நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஹெயின்ரிக் கிளாஸென் சற்று கூட்டணி அமைத்து விளையாடினார்கள். பொறுமையாக விளையாடி 4-வது விக்கெட் கூட்டணிக்கு 50 ரன்கள் சேர்த்தார்கள். நடு ஓவர்களில் கலக்கி வரும் சாய் கிஷோர், கிளாஸெனை 27 ரன்களுக்கு போல்ட் செய்தார். தனது கடைசி ஓவரிலேயே நிதிஷ் ரெட்டியையும் 31 ரன்களுக்கு வீழ்த்தினார்.
15.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்து கடைசி நேர அதிரடிக்கு ஆள் இல்லாமல் தடுமாறியது சன்ரைசர்ஸ். கமிந்து மெண்டிஸும் 1 ரன்னுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுண்டரிகளை அடித்து விளையாடினார். 19-வது ஓவரை வீசிய சிராஜ் அனிகெட் வர்மா மற்றும் சிமர்ஜித் சிங் விக்கெட்டை வீழ்த்தி கலக்கியிருந்தாலும், இஷாந்த் சர்மா ஓவரில் ரன்கள் குவிக்கப்பட்டன.
இஷாந்த் சர்மா வீசிய 18-வது ஓவரில் இரு பவுண்டரிகள், கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸர் அடித்தார் கம்மின்ஸ். கடைசி ஓவரில் முஹமது ஷமியும் தன் பங்குக்கு ஒரு பவுண்டரி அடிக்க, சன்ரைசர்ஸ் 150 ரன்களை கடந்தது.
20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. கம்மின்ஸ் 9 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சிராஜ் 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
153 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத்துக்கு சாய் சுதர்சனால் இம்முறை சரியான தொடக்கத்தைத் தர முடியவில்லை. 5 ரன்களுக்கு முஹமது ஷமியிடம் வீழ்ந்தார் சாய் சுதர்சன். கம்மின்ஸ் வீசிய அடுத்த ஓவரிலேயே ஜாஸ் பட்லரும் டக் அவுட் ஆனார். 4-வது பேட்டராக வந்த வாஷிங்டன் சுந்தர் பவர்பிளேயின் கடைசி ஓவரில் தலா இரு பவுண்டரிகள், இரு சிக்ஸர்களை நொறுக்கி சன்ரைசர்ஸ் கட்டுப்பாட்டிலிருந்த ஆட்டத்தைத் தட்டிப் பறித்தார். 6 ஓவர்களில் 48 ரன்கள் எடுத்தது குஜராத்.
ஷுப்மன் கில் மற்றும் வாஷிங்டன் சுந்தர் பவர்பிளே முடிந்து சீரான வேகத்தில் விளையாட, குஜராத் 10 ஓவர்களில் 82 ரன்கள் எடுத்து ஆட்டத்தைத் தங்களுடையக் கட்டுப்பாட்டில் வைத்தது. நடு ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்த சரியான பந்துவீச்சாளர்கள் இல்லாததால் கம்மின்ஸ் தனது மூன்றாவது ஓவரை 11-வது ஓவரிலேயே வீசினார். அதுவும் பலனளிக்கவில்லை. 36 பந்துகளில் அரை சதம் அடித்தார் கேப்டன் ஷுப்மன் கில்.
இதனால், முஹமது ஷமியின் கடைசி ஓவரை 14-வது ஓவரிலேயே வீசச் சொன்னார் கம்மின்ஸ். பலனாக வாஷிங்டன் சுந்தர் 1 ரன்னில் அரை சதத்தைத் தவறவிட்டு 29 பந்துகளில் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த கேட்சுக்கு மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்த தீர்ப்பு குஜராத்துக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. எனினும், கில் மற்றும் வாஷிங்டன் இணை 90 ரன்கள் சேர்த்தது.
36 பந்துகளில் 41 ரன்கள் தேவைப்பட்டபோது அபிஷேக் சர்மா ஓவரில், இம்பாக்ட் வீரராக வந்த ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 4 பவுண்டரிகளை அடித்து குஜராத் வெற்றியை ஏறத்தாழ உறுதி செய்துவிட்டார். ஸீஷன் அன்சாரி வீசிய அடுத்த ஓவரில் கில் இரு பவுண்டரிகள் அடித்தார். 17-வது ரூதர்ஃபோர்ட் இமாலய சிக்ஸர், பவுண்டரி அடிக்க, அந்த ஓவரிலேயே குஜராத் வெற்றி பெற்றது. 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்த குஜராத் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கில் 61 ரன்களுடனும் ரூதர்ஃபோர்ட் 35 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைடன்ஸ் 6 புள்ளிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. சன்ரைசர்ஸ் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.