சதமடித்த கில், சாய் சுதர்சன்: சிஎஸ்கேவை வீழ்த்திய குஜராத்!

சிறப்பாகப் பந்துவீசிய மோஹித் சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சிஎஸ்கேவை வீழ்த்திய குஜராத்!
சிஎஸ்கேவை வீழ்த்திய குஜராத்!ANI

சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே - குஜராத் அணிகள் அஹமதாபாதில் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

நீண்ட நாள்களுக்குப் பிறகு டாஸில் வெற்றி பெற்றார் ருதுராஜ். ஆனால், அந்த சந்தோஷம் நீண்ட நேரத்துக்கு நிலைக்கவில்லை. குஜராத் அணியின் தொடக்க ஆட்டகாரர்களான சாய் சுதர்சன் மற்றும் கில் சிஎஸ்கே பந்துவீச்சாளர்களை நொறுக்கி தள்ளினர். இருவரும் அதிரடியாக விளையாடி பவர்பிளேவில் விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து இவர்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் அரை சதம் அடித்தார். 9.3 ஓவர்களில் குஜராத் அணி 100 ரன்களை எட்டியது. இதன் பிறகு கில்லும் அரை சதம் அடித்தார். குஜராத் அணி அடுத்த 19 பந்துகளில் 50 ரன்களை அடித்தது. 12.4 ஓவர்களில் 150 ரன்களை கடந்தது குஜராத் அணி. இதைத் தொடர்ந்து இந்த கூட்டணி 200 ரன்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய கில் 50 பந்துகளில் சதம் அடித்தார்.

மறுமுனையில் அருமையாக விளையாடிய சாய் சுதர்சனும் 50 பந்துகளில் சதம் அடித்தார். இது அவரது முதல் ஐபிஎல் சதமாகும். இதன் பிறகு சாய் சுதர்சன் 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 51 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து தேஷ்பாண்டே பந்தில் வெளியேறினார். கில் 6 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 55 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து அவரும் தேஷ்பாண்டே பந்தில் வெளியேறினார். மில்லர் 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது.

இதைத் தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு தொடக்கம் மிக மோசமாக அமைந்தது. ரச்சின் ரவீந்திராவை சிறப்பான முறையில் ரன் அவுட் செய்து வெளியேற்றினார் மில்லர். அடுத்ததாக ரஹானே 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து கெயிக்வாட் டக் அவுட் ஆகி வெளியேற 3 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 10 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதைத் தொடர்ந்து மொயீன் அலி - டேரில் மிட்செல் கூட்டணி அமைத்தனர். இருவரும் அதிரடியாக விளையாடி 50 ரன்களை சேர்த்தனர். அணியின் ஸ்கோரும் வேகமாக உயர்ந்தது. ஆனாலும், அது போதவில்லை என்று தான் சொல்ல வேண்டும் 9 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 77 ரன்கள் எடுத்தது.

நூர் அஹமதின் ஒரே ஓவரில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார் மொயீன் அலி. மறுமுனையில் அதிரடியாக விளையாடிய மிட்செல் அரை சதம் அடித்தார். 12 ஓவர்களில் 119 ரன்களை எடுத்தது சிஎஸ்கே அணி. சிறப்பாக விளையாடிய மிட்செல் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 34 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து மோஹித் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். மோஹித் தனது முதல் ஓவரிலேயே விக்கெட்டை எடுத்தார்.

மொயீன் அலி அரை சதம் அடித்தார். 7 ஓவர்களில் 107 ரன்கள் தேவைப்பட்டது. மொயீன் அலி 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 36 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து மோஹித் சர்மா பந்திலேயே ஆட்டமிழந்தார். ஆட்டம் சிஎஸ்கே கைகளை விட்டு நழுவியது. ஆனால், மீண்டும் நம்பிக்கை அளிக்கும் வகையில் ஜடேஜா - துபே கூட்டணி அமைந்தது. இருவரும் சிறப்பாக விளையாட 16 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 162 ரன்கள் எடுத்தது.

4 ஓவர்கள் முடிவில் 70 ரன்கள் தேவைப்பட்டது. துபே 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து மோஹித் சர்மா பந்தில் வெளியேற, தோனி களமிறங்கினார். ஜடேஜா 10 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன் பிறகு ஆட்டம் குஜராத் பக்கம் திரும்பியது. ஆட்டத்தில் தோல்வியடைவது உறுதி என தெரிந்தாலும், கடைசியில் தோனியின் ஆட்டம் சிஎஸ்கே ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளித்திருக்கும். 3 சிக்ஸர்கள் 1 பவுண்டரியுடன் 11 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார் தோனி. 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 196 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் இந்த ஆட்டத்தில் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டது குஜராத். சிறப்பாகப் பந்துவீசிய மோஹித் சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிஎஸ்கே அணி 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in