பிஜிடி: கேம்ரூன் கிரீன் விலகல்

கேம்ரூன் கிரீன், முதுகெலும்பில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார்.
கேம்ரூன் கிரீன்
கேம்ரூன் கிரீன்ANI
1 min read

காயம் காரணமாக ஆஸி. வீரர் கேம்ரூன் கிரீன் அடுத்த 6 மாதங்களுக்கு விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கடந்த இரு டெஸ்ட் தொடர்களையும் கோலி, ரஹானே தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை படைத்தது.

இந்நிலையில் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.

நவம்பர் 22-ல் பெர்த் நகரில் தொடங்கும் பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடர், ஜனவரி 7-ல் முடிவடைகிறது.

ஆஸ்திரேலிய அணி கடைசியாக 2014-15 பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரை வென்றது.

இந்நிலையில் காயம் காரணமாக ஆஸி. வீரர் கேம்ரூன் கிரீன் பார்டர் காவஸ்கர் தொடர் உள்பட அடுத்த 6 மாதங்களுக்கு எவ்வித போட்டியிலும் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேம்ரூன் கிரீன், முதுகெலும்பில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார். இதனால் இந்தியாவுக்கு எதிரான 5 டெஸ்டுகள், வருகிற பிப்ரவரியில் நடைபெறவுள்ள இலங்கைக்கு எதிரான தொடர், சாம்பியன்ஸ் டிராபி போன்றவற்றில் கேம்ரூன் கிரீன் பங்கேற்கமாட்டார்.

மேலும், அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியிலும் அவர் பங்கேற்பது சந்தேகம் என்றே தெரிகிறது. வழக்கமாக ஒருவருக்கு முதுகெலும்பில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டால், அதிலிருந்து முழுமையாக குணமடைய 9 மாதங்கள் வரை ஆகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் கேம்ரூன் கிரீன் 6 மாதங்களில் முழுமையாக குணமடைந்து விடுவார் என்று நம்பிக்கை அளித்துள்ளது.

கேம்ரூன் கிரீன் விலகியதை தொடர்ந்து ஆஸி. அணியின் 4-வது வரிசை பேட்டராக ஸ்டீவ் ஸ்மித் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேம்ரூன் கிரீன், இதுவரை 28 டெஸ்டுகளில் விளையாடி 6 அரை சதங்கள், 2 சதங்கள் உள்பட 1377 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், 28 ஒருநாள் ஆட்டங்களில் 626 ரன்களும், 13 டி20 ஆட்டங்களில் 263 ரன்களும் எடுத்துள்ளார்.

ஆல் ரவுண்டரான இவர், டெஸ்டில் 35 விக்கெட்டுகளையும், டி20-யில் 12 விக்கெட்டுகளையும், ஒருநாள் ஆட்டங்களில் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in