
ஆஸி. அதிரடி பேட்டர் கிளென் மேக்ஸ்வெல், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். தன்னால் 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை விளையாட முடியாது என்பதால் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மேக்ஸ்வெல் ஓய்வை அறிவிக்கவில்லையென்றாலும் ஆஸி. டெஸ்ட் அணியில் மேக்ஸ்வெலுக்கு இனிமேல் இடம் கிடைப்பது சாத்தியமில்லை.
2012 முதல் ஆஸி. ஒருநாள் அணியில் இடம்பெற்ற மேக்ஸ்வெல் 149 ஒருநாள் ஆட்டங்களில் 4 சதங்களுடன் 3,990 ரன்களும் 77 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். பேட்டிங் ஸ்டிரைக் ரேட் 126.70. ஒருநாள் கிரிக்கெட்டில் ஆண்ட்ரே ரஸ்ஸலுக்கு அடுத்ததாக அதிக ஸ்டிரைக் ரேட் கொண்டுள்ளார் மேக்ஸ்வெல்.
2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மறக்க முடியாத இரட்டைச் சதத்தை எடுத்தார். இந்த மைல்கல்லை எட்டிய முதல் ஆஸி. வீரர், இலக்கை விரட்டியபோதும் தொடக்க வீரராக இல்லாமலும் இரட்டைச் சதமெடுத்த முதல் வீரர் என்கிற பெருமைகளையும் மேக்ஸ்வெல் அடைந்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் 2026 டி20 உலகக் கோப்பை வரை சர்வதேச டி20யில் விளையாடவுள்ளதாகவும் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.