
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய பேட்டர்கள் ஷுப்மன் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் முதல் 5 இடங்களில் 3 இடங்களைப் பிடித்துள்ளார்கள்.
பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
ஷுப்மன் கில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இறுதிச் சுற்றில் ஆட்டநாயகன் விருதை வென்ற ரோஹித் சர்மா இரு இடங்கள் முன்னேற்றம் கண்டு 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் 218 ரன்கள் விளாசிய விராட் கோலி 5-வது இடத்தில் உள்ளார்.
நடுவரிசையில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த ஷ்ரேயஸ் ஐயர் 8-வது இடத்தில் உள்ளார். சாம்பியன்ஸ் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த நியூசிலாந்து இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா 14 இடங்கள் முன்னேற்றம் கண்டு 14-வது இடத்தை அடைந்துள்ளார். ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் 8 இடங்கள் முன்னேற்றம் கண்டு 8-வது இடத்தை அடைந்துள்ளார்.
பந்துவீச்சில் இந்திய வீரர்கள் இருவர் முதல் 10 இடங்களில் உள்ளார்கள். இறுதிச் சுற்றில் இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ் 3 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை அடைந்துள்ளார். ரவீந்திர ஜடேஜாவும் 3 இடங்கள் முன்னேற்றம் கண்டு 10-வது இடத்தில் உள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை முழுக்க ஆதிக்கம் செலுத்திய நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 6 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை அடைந்துள்ளார். இவர் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையிலும் ஒரு இடம் முன்னேற்றம் கண்டு 4-வது இடத்தை அடைந்துள்ளார்.
நியூசிலாந்தின் மற்றொரு ஆல்-ரவுண்டரும் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளவருமான மைக்கேல் பிரேஸ்வெல் ஆல்-ரவுண்டர்களுக்கான தரவரிசையில் 7 இடங்கள் முன்னேற்றம் கண்டு 7-வது இடத்தை அடைந்துள்ளார்.