
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் மூன்றாம் நாள் உணவு இடைவேளையில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்து 432 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா, வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் சென்னையில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்களும், வங்கதேசம் 149 ரன்களும் எடுத்தன.
227 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா, ஃபாலோ ஆனுக்கு அழைக்காமல் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்திருந்தது. ஷுப்மன் கில் 33 ரன்களுடனும், ரிஷப் பந்த் 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
மூன்றாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. இருவரும் தொடக்கத்தில் நிதான ஆட்டத்தைக் கடைபிடித்தார்கள். மெஹிதி ஹசன் ஓவரில் இரு சிக்ஸர்கள் அடித்த கில் அரை சதத்தை எட்டினார். முதல் 45 நிமிடங்கள் வங்கதேச பந்துவீச்சாளர்கள் நன்றாகவே பந்துவீசினார்கள்.
சிறிய குடிநீர் இடைவேளைக்குப் பிறகு கில், பந்த் பேட்டிங்கில் மாற்றம் தென்படத் தொடங்கியது. ரிஷப் பந்த் தனக்கே உரித்தான பாணியில் ஒற்றைக் கையில் சிக்ஸர் அடித்து ஆட்ட பாணியை மாற்றினார். கில் வரிசையில் ரிஷப் பந்தும் டெஸ்டில் அரை சதம் கண்டார்.
இருவரும் அதிரடியாக விளையாட இந்திய அணியின் முன்னிலை 400-ஐ நெருங்கியது. 4-வது விக்கெட்டுக்கு கில், பந்த் இணை 100 ரன்களைக் கடந்தது. அதிரடிக்கு மத்தியில் கேட்ச் வாய்ப்புகளையும் வங்கதேசம் தவறவிட்டது.
இதன் விளைவாக மூன்றாம் நாள் உணவு இடைவேளை வரை இருவரும் விக்கெட்டை இழக்காமல் இருந்தார்கள்.
உணவு இடைவேளையில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்துள்ள இந்திய அணி 432 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கில் 86 ரன்களுடனும், பந்த் 82 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள்.