
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டை போராடி டிரா செய்த இந்திய அணி தோல்வியிலிருந்து தப்பியுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதல் இன்னிங்ஸில் இந்தியா 358 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 669 ரன்கள் குவித்து 311 ரன்கள் முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காத நிலையில், யஷஸ்வி ஜெயிஸ்வால் மற்றும் சாய் சுதர்சனை இழந்தது இந்தியா. எனினும் கேஎல் ராகுல் மற்றும் ஷுப்மன் கில் நான்காவது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட்டை இழக்காமல் அட்டகாசமான கூட்டணியை அமைத்தார்கள். நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்திருந்தது. கேஎல் ராகுல் 87 ரன்களுடனும் ஷுப்மன் கில் 78 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
நான்காவது நாள் ஆட்டத்தின்போது காயம் காரணமாக பந்துவீசாமல் இருந்த பென் ஸ்டோக்ஸ், ஐந்தாவது நாள் ஆட்டத்தில் காயத்துடனே பந்தைக் கையிலெடுத்தார். ஆடுகளமும் கரடு முரடாக பவுன்ஸ் ஆகி பேட்டர்களுக்கு தொல்லை கொடுத்தது. இதில் சிக்கிய ராகுல் 90 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ராகுல், கில் இணை 421 பந்துகளில் 188 ரன்கள் எடுத்தது.
வாஷிங்டன் சுந்தர் பொறுமை காக்க, ஷுப்மன் கில் இந்தத் தொடரில் நான்காவது சதத்தை அடித்து அசத்தினார். உணவு இடைவேளைக்கு சற்று முன்னதாக சதமடித்த ஷுப்மன் கில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா முதல் பந்திலேயே கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஜோ ரூட் தவறவிட்டார். உணவு இடைவேளையில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்து 88 ரன்கள் பின்தங்கிய நிலையிலேயே இருந்தது. இங்கிலாந்து கை ஓங்கி இருந்தது.
கடைசி இரு பகுதிகள் ஆட்டத்தில் ஒரு விக்கெட்டை எடுத்தால், அது அடுத்தடுத்த விக்கெட்டுகளுக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் போராடினார்கள். ஆடுகளத்திலிருந்த உதவியைப் பயன்படுத்தி இடக்கை பேட்டர்களுக்கு உள்ளே பந்தைக் கொண்டு செல்ல லியம் டாசன் எவ்வளவோ முயற்சித்தார். ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் துளியளவுகூட இடம் கொடுக்காமல் அற்புதமான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
112-வது ஓவரில் இந்தியா 300-ஐ தொட்டது. வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அடுத்தடுத்து அரை சதம் அடித்தார்கள். இந்திய அணி முன்னிலை பெற்றது. தேநீர் இடைவேளை வரை இருவரும் விக்கெட்டை கொடுக்காமல் விளையாடி நம்பிக்கையளித்தார்கள். தேநீர் இடைவேளையில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 322 ரன்கள் எடுத்தது.
கடைசி பகுதி ஆட்டத்தில் 5-வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா இணை 100 ரன்களை கடந்தது. பிறகு 150 ரன்களை கடந்தது. இந்திய அணியும் 350 ரன்களை கடந்தது. 125 ஓவர்களை தாண்டியதால், இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் மற்றும் ஃபீல்டர்கள் சோர்வடைந்து காணப்பட்டார்கள்.
இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 386 ரன்கள் எடுத்து 75 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. கடைசி ஒரு மணி நேரம் என நடுவர்கள் அழைத்தபோது, ஆட்டத்தை முடித்துக்கொள்ள இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முன்வந்தார்.
ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஸ்டோக்ஸ் கோரிக்கையை ஏற்கவில்லை. வாஷிங்டன் சுந்தர் 80 ரன்களுடனும் ஜடேஜா 89 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இருவரும் சதத்தை அடிக்க வேண்டும் என்பதற்காக ஆட்டத்தை நீட்டிக்க விரும்புவதாக இங்கிலாந்து வீரர்கள் கோபமடைந்தார்கள்.
பிறகு, ஒரு புறம் ஹாரி புரூக் பந்துவீசினார். இவருடைய ஓவரில் சிக்ஸர் அடித்த ஜடேஜா தனது டெஸ்ட் சதத்தை கடந்தார். ஜோ ரூட் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி, புரூக் ஓவரில் பவுண்டரி என வேகமாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் தனது முதல் டெஸ்ட் சதத்தைக் கடந்தார்.
இதைத் தொடர்ந்து, ஆட்டத்தை முடித்துக்கொள்ள இரு அணிகளும் ஒப்புக்கொண்டன. இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 425 ரன்கள் எடுத்திருந்தது. 143 ஓவர்களுக்கு பேட் செய்த இந்திய அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா 107 ரன்களுடனும் வாஷிங்டன் சுந்தர் 101 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். வாஷிங்டன், ஜடேஜா இணை 334 பந்துகளை எதிர்கொண்டு 203 ரன்கள் சேர்த்தது.
இதன்மூலம், மான்செஸ்டர் டெஸ்ட் டிராவில் முடிந்தது. ஆட்ட நாயகன் விருதை பென் ஸ்டோக்ஸ் வென்றார். முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் சதம் அடித்து பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தினார்.
பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து மண்ணில் இரண்டாவது முறையாக ஒரு டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளது. டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.
Ind v Eng | India v England | Ind vs Eng | India vs England | Shubman Gill | KL Rahul | Ravindra Jadeja | Washington Sundar | Ben Stokes | Liam Dawson | Harry Brook | Manchester Test | India tour of England | India England Test Series | Drawn |