விராட் கோலியின் பேட்டிங் குறித்து பாண்டிங் பேசியதற்கு கம்பீர் பதிலடி கொடுத்த நிலையில், அது குறித்து விளக்கம் அளித்துள்ளார் பாண்டிங்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடர் நவம்பர் 22-ல் பெர்த் நகரில் தொடங்குகிறது.
இதனிடையே விராட் கோலியின் பேட்டிங் குறித்து ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், “ஒரு புள்ளிவிவரம் பார்த்தேன். கடந்த 5 ஆண்டுகளில் இரண்டு சதங்களை மட்டுமே விராட் கோலி அடித்துள்ளார். இது எனக்குச் சரியாகப் படவில்லை. அப்படிச் சரியாக இருந்தால், அது கவலைக்குரிய விஷயம். இப்படி இன்னொரு வீரர் விளையாடியிருந்தால் அணியில் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்திருக்காது” என்று விமர்சனம் செய்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக தனது அணி வீரர்களை விட்டுக்கொடுக்காத கெளதம் கம்பீர், ரிக்கி பாண்டிங்கைக் கடுமையாகச் சாடினார். கம்பீர் கூறுகையில், “ரிக்கி பாண்டிங்குக்கு இந்திய கிரிக்கெட்டில் என்ன வேலை? அவர் ஆஸ்திரேலிய அணியைப் பற்றி சிந்திக்க வேண்டும் என நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் பாட்காஸ்ட் ஒன்றில் பேசிய ரிக்கி பாண்டிங், “கம்பீரின் குணம் குறித்து நான் நன்கு அறிவேன். நியூசிலாந்து தொடரில் தோல்வி அடைந்ததால் அவர் அவ்வாறு பேசியிருக்கலாம். ஏற்கெனவே இதுபோன்ற விவாதங்கள் எங்களுக்குள் நடந்ததால், இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு என் மீது கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் இரண்டு சதங்களை மட்டுமே விராட் கோலி அடித்தது எனக்கு கவலை அளித்தது, எனவே ஆஸ்திரேலிய மண்ணில் அவர் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவார் என்றுதான் நான் சொல்லி இருந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.