
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஒரு கபடதாரி என முன்னாள் வீரர் மனோஜ் திவாரி காட்டமாக விமர்சித்துள்ளார்.
நியூஸ் 18 பாங்களாவுக்கு அளித்த பேட்டியில் மனோஜ் திவாரி, தனது விமர்சனங்களை வைத்துள்ளார்.
"கௌதம் கம்பீர் ஒரு கபடதாரி. அவர் எப்போதும் சொல்வதைச் செய்யவே மாட்டார். கேப்டன் மும்பையைச் சேர்ந்தவர். அபிஷேக் நாயர் மும்பையைச் சேர்ந்தவர். மும்பை வீரரை முன்னிலைப்படுத்துவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு அமைந்துவிட்டது.
ஜலஜ் சக்ஸேனாவுக்காகப் பேச யாரும் இல்லை. அவர் சிறப்பாகச் செயல்படுவார், ஆனால் அமைதியாக இருப்பார்.
பந்துவீச்சுப் பயிற்சியாளரின் பயன் என்ன? பயிற்சியாளர் என்ன சொல்கிறாரோ அதை அவர் ஒப்புக்கொள்வார். மார்னே மோர்கல் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து வந்தார். அபிஷேக் நாயர் கொல்கத்தா நைட் ரைடர்ஸில் கம்பீருடன் இருந்துள்ளார். அவர் தன்னுடைய அறிவுரைகளுக்கு எதிராகச் செயல்பட மாட்டார் என்பது தலைமைப் பயிற்சியாளருக்குத் தெரியும். அதனால் தான் அவர்கள் இந்திய அணியின் நிர்வாகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்கள்.
ரோஹித் சர்மாவும் கௌதம் கம்பீரும் எப்படி இணைந்து செயல்படுவார்கள்?. ரோஹித் சர்மா உலகக் கோப்பை வென்ற கேப்டன். கம்பீர் வீரராகவும் சரி ஆலோசகராகவும் சரி கேகேஆர் அணியை இருமுறை கோப்பை வெல்ல உதவியிருக்கிறார்.
கேகேஆர் கோப்பையை வெல்ல கம்பீர் தனிநபராக வழிநடத்தவில்லை. அணியாக நாங்கள் அனைவரும் செயல்பட்டோம். ஜேக் காலிஸ், மன்விந்தர் பிஸ்லா மற்றும் நான் பேட்டிங்கில் செயல்பட்டோம். சுனில் நரைன் அற்புதமாகப் பந்துவீசினார். அதனால் தான் முதல் ஐபிஎல் கோப்பையை எங்களால் வெல்ல முடிந்தது. ஆனால், பாராட்டுகளைப் பெற்றது யார்? அனைத்துப் பாராட்டுகளையும் கம்பீர் எடுத்துக்கொள்ள சூழலும் விளம்பரமும் அவரை அனுமதிக்கிறது" என்றார் மனோஜ் திவாரி.
பிஜிடி தொடரில் அஸ்வின் ஓய்வுக்குப் பதில் மாற்று வீரராக மும்பையைச் சேர்ந்த தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டார். இதைக் குறிப்பிட்டு மனோஜ் திவாரி விமர்சனங்களை முன்வைத்துள்ளார். முன்னதாக, 2015-ல் ரஞ்சி கோப்பைப் போட்டியில் இருவரும் மிகக் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டது சர்ச்சையானது.