கோலியின் பேட்டிங் குறித்து பாண்டிங் விமர்சனம்: கம்பீர் பதிலடி
ANI

கோலியின் பேட்டிங் குறித்து பாண்டிங் விமர்சனம்: கம்பீர் பதிலடி

இந்திய அணி குறித்து பாண்டிங் எதற்கு பேச வேண்டும்?
Published on

விராட் கோலி, ரோஹித் சர்மாவின் பேட்டிங் குறித்து தனக்கு எந்த கவலையும் இல்லை என கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் கடந்த இரு டெஸ்ட் தொடர்களையும் கோலி, ரஹானே தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை படைத்தது.

இந்நிலையில் இந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.

நவம்பர் 22-ல் பெர்த் நகரில் தொடங்கும் பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடர், ஜனவரி 7-ல் முடிவடைகிறது.

ஏற்கெனவே சிராஜ், வாஷிங்டன் சுந்தர், கில், ஆகாஷ் தீப், ஜெயிஸ்வால் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற நிலையில், மற்ற வீரர்களும் பயிற்சியாளர்களும் இன்று புறப்படுகிறார்கள்.

முன்னதாக, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம், பாண்டிங் சமீபத்தில் கோலி குறித்து விமர்சனம் செய்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கம்பீர், “விராட் கோலி, ரோஹித் சர்மாவின் பேட்டிங் குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

கம்பீர் பேசியதாவது

இந்திய அணி குறித்து பாண்டிங் எதற்கு பேச வேண்டும்? அவர் ஆஸ்திரேலிய அணியை குறித்து சிந்திக்க வேண்டும் என நினைக்கிறேன். முக்கியமாக, ரோஹித் மற்றும் விராட் கோலி குறித்து எனக்கு எந்தக் கவலையும் இல்லை. இந்திய அணிக்காக அவர்கள் ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ளனர். வருங்காலத்திலும் இந்திய அணிக்காக அதிக பங்களிப்பை கொடுப்பார்கள். இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்பதற்காக இருவரும் கடுமையாக உழைக்கிறார்கள். குறிப்பாக, நியூசிலாந்து தொடருக்கு பிறகு அவர்களிடம் உள்ள பசி அதிகரித்துள்ளதை என்னால் பார்க்க முடிகிறது.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

முன்னதாக, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பாண்டிங், “5 ஆண்டுகளில் இரண்டு சதங்களை மட்டுமே அடித்த ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவது சரியில்லை” என்று கோலியை குறிப்பிட்டு கருத்து தெரிவித்திருந்தார்.

logo
Kizhakku News
kizhakkunews.in