
சமூக வலைத்தளங்களில் பேசுவதை வைத்தோ அல்லது வல்லுநர்களின் கருத்துகளை வைத்தோ, நாங்கள் வீரர்களை தேர்வு செய்வதில்லை என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் புனேவில் நாளை (அக்டோபர் 24) தொடங்குகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
முன்னதாக, கே.எல். ராகுலின் ஆட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இதற்கு பதிலளித்த கம்பீர், “சமூக வலைத்தளங்களில் பேசுவதை வைத்தோ அல்லது வல்லுநர்களின் கருத்துகளை வைத்தோ, நாங்கள் வீரர்களை தேர்வு செய்வதில்லை. அணியின் நிர்வாககும், தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களும் என்ன முடிவு செய்கிறார்கள் என்பது தான் முக்கியம். ராகுலைப் பொறுத்தவரை, அவர் நன்றாக விளையாடி கொண்டிருக்கிறார். கான்பூரில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்டில், மிகவும் கடினமான ஆடுகளத்தில் சூழலுக்கு ஏற்ப சிறப்பாக விளையாடினார். இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார், அவரிடம் அதற்கான திறமையும் உள்ளது. எனவே, அணியின் நிர்வாகமும் அவருக்கு பக்கபலமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.