இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கம்பீர் நியமனம்

இந்திய கிரிக்கெட்டை முன்னெடுத்துச் செல்ல கௌதம் கம்பீர் சரியான நபராக இருப்பார் என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
கௌதம் கம்பீர் மற்றும் ஜெய் ஷா
கௌதம் கம்பீர் மற்றும் ஜெய் ஷா

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான தலா 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலிருந்து தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கவுள்ளார். டிசம்பர் 2027 வரை மூன்றரை ஆண்டுகளுக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கம்பீர் நீடிப்பார்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியுடன் நிறைவடைந்தது. இதனிடையே, புதிய தலைமைப் பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டது.

இந்திய அணியின் முன்னாள் வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகருமான கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்குத் தேர்வாகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், ஜெய் ஷா மற்றும் பிசிசிஐ தரப்பில் கம்பீர் நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட்டை முன்னெடுத்துச் செல்ல கௌதம் கம்பீர் சரியான நபராக இருப்பார் என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கௌதம் கம்பீர் கூறுகையில், "நாட்டுக்காக சேவையாற்றுவது எனக்குக் கிடைத்த பெருமை. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்பது பெருமையாகவும் உற்சாகமாகவும் உள்ளது" என்றார்.

ஐபிஎல் போட்டியில் 2022, 2023 பருவங்களில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகராக கம்பீர் இருந்தார். இந்த இரு பருவங்களிலும், லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் குவாலிஃபையர் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

கடந்தாண்டு நவம்பரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராகப் பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்ற முதல் ஆண்டிலேயே கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பையை வென்று சாதித்தது.

ராகுல் டிராவிட் தலைமையின் கீழ் இந்திய அணி 50 ஓவர் உலகக் கோப்பையில் இறுதிச் சுற்று வரை முன்னேறியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச் சுற்று வரை முன்னேறியது. நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி கோப்பை வென்று சாதித்தது. ராகுல் டிராவிட்டுடன் பணியாற்றிய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே, ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலிப் ஆகியோரது பதவிக் காலமும் முடிவுக்கு வந்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in