
பாகிஸ்தானின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து உடனடியாக விலகுவதாக கேரி கிர்ஸ்டன் அறிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 2024-ல் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட இவர், இரண்டு ஆண்டுகளுக்குத் தலைமைப் பயிற்சியாளராக செயல்படுவார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் ஒப்பந்தம் போடப்பட்டது.
தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றவுடன் கிர்ஸ்டன் எதிர்கொண்ட முதல் சவால் டி20 உலகக் கோப்பை. இதில் அமெரிக்கா மற்றும் இந்தியாவிடம் தோல்வியடைந்ததால், பாகிஸ்தான் அணி முன்கூட்டியே டி20 உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது. இதைத் தொடர்ந்து, ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து பாபர் ஆஸம் விலகினார்.
இதனிடையே, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. தோல்வியைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய தேர்வுக் குழுவை அமைத்தது. இந்தக் குழுவில் ஆகிப், ஓய்வுபெற்ற நடுவர் அலீம் டார், அசால் அலி, ஆசாத் ஷஃபிக் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளார்கள்.
புதிய தேர்வுக் குழு அமைக்கப்பட்டவுடன், அணித் தேர்வில் பயிற்சியாளர்களுக்கு இருந்த அதிகாரத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பறித்தது. இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த டெஸ்ட் அணிக்கான பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பி, தான் வெறும் ஆட்ட நாளுக்கான ஒரு பயிற்சியாளர் மட்டுமே என்றார். மேலும், தான் ஒப்பந்தம் செய்யப்பட்டது இதற்காக அல்ல என்றும் அவர் கூறினார்.
இந்தக் குழப்பங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக முஹமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு மற்றும் ஆஸ்திரேலிய தொடருக்கான அணி அறிவிப்பில் கேரி கிர்ஸ்டனின் கருத்து, கருத்தில் கொள்ளப்படவில்லை எனத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்துதான், ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கேரி கிர்ஸ்டன் விலகியுள்ளார். இவர் விலகலைத் தொடர்ந்து, டெஸ்ட் தலைமைப் பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பி, கிர்ஸ்டன் இடத்தை நிரப்பியுள்ளார். 2011-ல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கிர்ஸ்டன், ஒரு ஒருநாள் ஆட்டத்தில்கூட பாகிஸ்தானின் தலைமைப் பயிற்சியாளராக செயல்படவில்லை.
பாகிஸ்தானுக்கு அடுத்த மாதம் பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது.