
ஒரே மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மூலம் நீங்கள் முன்னேற முடியாது என்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3 டெஸ்டுகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் வருகிற 16 அன்று பெங்களூரில் தொடங்குகிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், “நியூசிலாந்து தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
கம்பீர் பேசியதாவது:
“ஒரு நாளில் 400 ரன்களை அடிக்கவேண்டும் என்றாலும் சரி அல்லது இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து விளையாடி ஆட்டத்தை டிரா செய்ய வேண்டும் என்றாலும் சரி, அதற்கேற்ற அணியாக நாங்கள் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். ஒரே மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மூலம் நீங்கள் முன்னேற முடியாது. ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப மாறவேண்டும். மற்ற அணிகளைப் பற்றி எனக்கு தெரியவில்லை, ஆனால் எங்கள் அணியைப் பொறுத்தவரை எந்த சூழலையும் எதிர்கொள்ளும் வீரர்கள் இருக்கிறார்கள்.
வீரர்கள் தங்களின் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும், அப்படி விளையாடி ஒரு நாளில் 400-500 ரன்கள் அடிக்கட்டும், அதனால் என்ன? அதற்கும் தயாராக இருக்கிறோம். ஒரு சில நாட்களில் 100 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழக்கும் நிலைமை வரலாம், ஆனால் அப்போதும் வீரர்களுக்கு ஆதரவு அளிப்போம். நியூசிலாந்து தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்தோ, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டெஸ்டுகள் குறித்தோ, இப்போது சிந்திக்கவில்லை. தற்சமையத்தில் நியூசிலாந்து தொடரில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு ஆட்டம் எங்கு நடக்கிறது, யாருக்கு எதிராக நடக்கிறது என்பதெல்லாம் முக்கியம் இல்லை, இந்தியாவுக்காக விளையாடும்போது அனைத்து ஆட்டங்களிலும் வெல்ல வேண்டும்”.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.