
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பணிக்கான நேர்காணலில் கௌதம் கம்பீர் பங்கேற்கவுள்ளார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் ஜூன் இறுதியில் டி20 உலகக் கோப்பையுடன் நிறைவடைகிறது. இவருக்கு அடுத்தபடியாக ஜூலை 1 முதல் டிசம்பர் 31, 2027 வரையிலான புதிய தலைமைப் பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் மே 27 வரை பெறப்பட்டன.
இதைத் தொடர்ந்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக, தான் நியமிக்கப்பட்டால் அது தனக்குக் கிடைத்த பெருமை என்றும் தனக்கு அதில் விருப்பம் இருப்பதாகவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பணிக்கான நேர்காணலில் கௌதம் கம்பீர் பங்கேற்கவுள்ளார். மதியம் 12 மணிக்கு ஆன்லைன் மூலம் இந்த நேர்காணல் நடைபெறவுள்ளது.
முன்னதாக, கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்படுவது உறுதி என ஒரு ஐபிஎல் அணியின் உரிமையாளர் தகவல் தெரிவித்ததாகச் செய்திகள் கசிந்தன. எனவே, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கம்பீர் தேர்வுச் செய்யப்படுவார் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.