பாகிஸ்தான் தோல்வி: கொந்தளிப்பில் சாடும் முன்னாள் வீரர்கள்!

"ஓமன் மற்றும் அமெரிக்க நாடுகளைவிட நம் சராசரி மோசமானதாக உள்ளது.", "இது மூளையே இல்லாத, தெளிவற்ற ஒரு நிர்வாகம்."
பாகிஸ்தான் தோல்வி: கொந்தளிப்பில் சாடும் முன்னாள் வீரர்கள்!
ANI
2 min read

சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ள நிலையில், அந்நாட்டு முன்னாள் வீரர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்கள்.

சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் படுதோல்வியடைந்தது. முதலிரு ஆட்டங்களிலும் தோல்வியடைந்ததன் மூலம், அரையிறுதிக்குள் நுழைவதற்கான வாய்ப்பை இழக்கும் நிலையில் பாகிஸ்தான் உள்ளது.

பாகிஸ்தானின் மோசமான செயல்பாட்டைத் தொடர்ந்து முன்னாள் வீரர்கள் அந்த அணியையும் அணி நிர்வாகத்தையும் கடுமையாக சாடி வருகிறார்கள்.

வாசிம் அக்ரம்

வாசிம் அக்ரம் கூறுகையில், "வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நீண்ட காலமாக நாம் பழங்கால கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். இது மாற வேண்டும். பயமில்லாத வீரர்களை உள்ளே கொண்டு வர வேண்டும். அணியில் இள ரத்தத்தைப் புகுத்த வேண்டும். அணியில் 5-6 மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற தேவை எழுந்தால், தயவு செய்து அதைச் செய்யுங்கள். 6 மாதங்கள் தொடர் தோல்விகளைச் சந்தித்தால் பரவாயில்லை. 2026 டி20 உலகக் கோப்பைக்கான அணியைக் கட்டமைக்கத் தொடங்குங்கள்.

நடந்த வரை போதும். பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை நட்சத்திர வீரர்களாக மாற்றிவிட்டீர்கள். கடந்த 5 ஒருநாள் ஆட்டங்களில், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் 60 சராசரியில் வெறும் 24 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார்கள். அதாவது, ஒரு விக்கெட்டுக்கு 60 ரன்கள்! ஓமன் மற்றும் அமெரிக்க நாடுகளைவிட நம் சராசரி மோசமானதாக உள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் சார்... கேப்டன், தேர்வுக் குழு மற்றும் பயிற்சியாளரை அழையுங்கள். எந்த மாதிரியான அணியைத் தேர்வு செய்தீர்கள் எனக் கேள்வியெழுப்புங்கள்.

குஷ்தில் ஷா மற்றும் சல்மான் ஆகா விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளர்களைப்போல உள்ளார்களா? இந்த அணி சரியான அணி கிடையாது என்பதை வாரக்கணக்கில் கத்திக்கொண்டிருந்தேன். ஆனால், சிறந்த அணியைத் தேர்வு செய்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் சொல்கிறார்.

கேப்டனையும் காரணம் சொல்ல வேண்டும். அவர் தான் அணியின் தலைவர். எந்த மாதிரியான வெற்றி தேடி தரும் வீரர் வேண்டும் என்பது அவருக்குத் தெரியவில்லை என்றால், அது மிகவும் சங்கடத்துக்குரியது.

மைதானத்தில் பாகிஸ்தான் ரசிகர்களின் முகத்தைப் பார்த்திருக்க வேண்டும். பாகிஸ்தான் பந்துவீசும்போது 15 ஓவர்களிலேயே கிளம்பிச் செல்கிறார்கள். என் வாழ்க்கையில் இதைப்போல ஒன்றை நான் பார்த்தே கிடையாது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஒரு தேசமாக நாம் மிகுந்த உணர்ச்சிவசம் மிக்கவர்கள். ஆனால், இது வேதனையளிக்கிறது" என்றார் வாசிம் அக்ரம்.

ஷோயப் அக்தர்

ஷோயப் அக்தர் விமர்சிக்கையில், "பாகிஸ்தான் தோற்றதில் எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. காரணம், என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியும். 5 நல்ல பந்துவீச்சாளர்கள் இல்லாமல் விளையாடினால், இப்படிதான் நிகழும். ஒட்டுமொத்த உலகமும் 5 நல்ல பந்துவீச்சாளர்களுடன் விளையாடும்போது, நீங்கள் வெறும் ஆல்-ரவுண்டர்களை தேர்வு செய்கிறீர்கள். நீங்கள் என்ன யோசிக்கிறீர்கள் எனத் தெரியவில்லை. இது மூளையே இல்லாத, தெளிவற்ற ஒரு நிர்வாகம். மிகுந்த ஏமாற்றமாக உள்ளது." என்றார்.

பாகிஸ்தான் வீரர்களைக் குழந்தைகளாகக் குறிப்பிட்ட அக்தர், "குழந்தைகளை நாம் காரணம் சொல்ல முடியாது. அணி நிர்வாகம் என்னவோ, அதுதான் வீரர்களும். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் எனத் தெரியாது. முனைப்பு காட்ட வேண்டும் என்பது வேறு. ஆனால், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷுப்மன் கிலோ போல இவர்களிடத்தில் திறன் இல்லை. எந்தவொரு தெளிவான பார்வையும் இல்லாமல் விளையாடச் சென்றுள்ளார்கள். என்ன செய்ய வேண்டும் என்பது ஒருவருக்கும் தெரியாது" என்றார் ஷோயப் அக்தர்.

மேலும், பாபர் ஆஸம் குறித்து விமர்சித்த அக்தர், "நாம் எப்போதும் பாபர் ஆஸமை விராட் கோலியுடன் ஒப்பிடுவோம். விராட் கோலியின் ஆதர்சம் யார்? சச்சின் டெண்டுல்கர். அவர் 100 சதங்கள் அடித்துள்ளார். விராட் கோலி அவருடைய மரபைப் பின்பற்றுகிறார். பாபர் ஆஸமின் ஆதர்சம் யார்?

நீங்கள் தவறான ஆதர்ச நாயகர்களைத் தேர்வு செய்துள்ளீர்கள். உங்களுடையச் சிந்தனை தவறாக உள்ளது. தொடக்கத்திலிருந்து நீங்கள் ஒரு மோசடிக்காரர்.

பாகிஸ்தான் அணி குறித்து பேசவே எனக்கு விருப்பம் கிடையாது. காசு வருகிறது என்பதற்காக மட்டுமே நான் இதைச் செய்கிறேன். இது நேர விரயம் தான். இந்தச் சரிவை 2001 முதல் பார்த்து வருகிறேன்" என்றார் ஷோயப் அக்தர்.

இன்ஸமாம்-உல்-ஹக்

முன்னாள் கேப்டன் இன்ஸமாம்-உல்-ஹக் கூறுகையில், "வீரர்களின் செயல்பாட்டை மீண்டும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும். இப்படி மோசமாகச் செயல்படுவது இது முதல்முறையல்ல. கிரிக்கெட் தொடர்களை நான் குறிப்பிடவில்லை. ஆசியக் கோப்பை, உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை போன்ற போட்டிகள் குறித்து நான் பேசுகிறேன்.

நாம் போட்டிகளில் பக்கத்தில்கூட இல்லை. தொடக்கத்திலிருந்தே போட்டியிலிருந்து வெளியேறுகிறோம். ஓரளவுக்கு அழுத்தம் இருந்தால் போதும், நாம் சீட்டுக்கட்டுபோல சரிந்துவிடுகிறோம்" என்றார் இன்ஸமாம்-உல்-ஹக்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in