
நியூசிலாந்து ஜாம்பவான் ராஸ் டெய்லர் ஓய்விலிருந்து திரும்பி சமோவா (Samoa) அணிக்காக விளையாடவுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக 112 டெஸ்ட், 236 ஒருநாள் மற்றும் 102 சர்வதேச டி20-களில் விளையாடியுள்ளார் ராஸ் டெய்லர். நியூசிலாந்துக்காக 16 ஆண்டுகள் விளையாடிய ராஸ் டெய்லர் டெஸ்டில் 7,683 ரன்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 8,607 ரன்களும் சர்வதேச டி20யில் 1,909 ரன்களும் எடுத்துள்ளார்.
நியூசிலாந்துக்காக கடைசியாக 2022-ல் விளையாடி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ராஸ் டெய்லருக்கு அவருடைய தாய் வழியில் சமோவா நாட்டுடன் பிணைப்பு உள்ளது. சமோவா நாட்டின் கடவுச் சீட்டையும் அவர் வைத்துள்ளார். நியூசிலாந்துக்காக விளையாடி மூன்றரை ஆண்டுகள் ஆனதால், சமோவா அணிக்காக விளையாடுவதற்கானத் தகுதியை ராஸ் டெய்லர் பெற்றார்.
2026 டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று பிராந்திய அளவில் நடைபெற்று வருகின்றன. ஆசியா- கிழக்கு ஆசியா - பசிபிக் பிராந்தியத்துக்கான தகுதிச் சுற்று அக்டோபர் 8-ல் தொடங்குகிறது. சமோவா அணி உலகக் கோப்பைக்குத் தகுதி பெற இந்தப் பிராந்தியத்தின் கீழ் தகுதிச் சுற்றில் விளையாடுகிறது.
இதற்கான 15 பேர் கொண்ட அணியை சமோவா அணி அறிவித்துள்ளது. இதில் ராஸ் டெய்லர் இடம்பெற்றுள்ளார்.
"நான் விரும்பும் விளையாட்டுக்கு மீண்டும் திரும்புகிறேன் என்பதைவிட, பாரம்பரியம், கலாசாரம், கிராமங்கள் மற்றும் குடும்பத்துக்காக விளையாடுகிறேன் என்பது பெரும் பெருமை" என ராஸ் டெய்லர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
Ross Taylor | Samoa | T20 World Cup Qualifier