இந்திய முன்னாள் வீரர் திலிப் தோஷி காலமானார்!

1979-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்டில் அறிமுகமானார்.
இந்திய முன்னாள் வீரர் திலிப் தோஷி காலமானார்!
படம்: https://x.com/BCCI
1 min read

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடக்கை சுழற்பந்துவீச்சாளர் திலிப் தோஷி (77) காலமானார்.

இதயநோய் சார்ந்த பிரச்னைகள் காரணமாக லண்டனில் அவர் உயிரிழந்துள்ளார்.

திலிப் தோஷி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பிறந்தவர். சௌராஷ்டிரம், பெங்கால், வார்விக்‌ஷைர் மற்றும் நாட்டிங்காம்ஷைர் ஆகிய அணிகளுக்காக முதல் தர கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். 32-வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான தோஷி, 28 டெஸ்டுகளில் 100 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார். 1979-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்டில் அறிமுகமானார். அறிமுக இன்னிங்ஸிலேயே 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் தோஷி.

இந்தியாவுக்காக மொத்தம் 33 டெஸ்ட், 15 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 114 விக்கெட்டுகளையும் ஒருநாள் கிரிக்கெட்டில் 22 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் மொத்தம் 898 விக்கெட்டுகளை தோஷி வீழ்த்தியுள்ளார். 100 டெஸ்டுகளில் விளையாடியிருக்க வேண்டிய வீரர் என்று சொல்லப்படும் திலிப் தோஷி, இந்திய அணி அப்போது செயல்பட்ட விதத்தில் உடன்பாடு இல்லாததால், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மெல்ல விலகினார்.

கடந்த பல வருடங்களாகவே லண்டனில் வசித்து வந்த திலிப் தோஷி இதயநோய் பிரச்னைகள் காரணமாக காலமானார். இவருக்கு காலிந்தி என்ற மனைவி உள்ளார். நயன் தோஷி என்ற மகன் மற்றும் விஷாகா என்ற மகள் உள்ளார்கள். நயன் தோஷி சர்ரே மற்றும் சௌராஷ்டிரத்துக்காக முதல் தர கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார்.

திலிப் தோஷியின் மறைவுக்கு ரவி ஷாஸ்திரி, சுனில் ஜோஷி, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். பிசிசிஐ சார்பிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in