
ஐபிஎல் 2026-க்கு முன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சுப் பயிற்சியாளராக வருண் ஆரோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஃபிராங்க்லின் இந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
வருண் ஆரோன் இந்தியாவுக்காக 2011-ல் அறிமுகமாகி, கடைசியாக 2015-ல் இந்தியாவுக்காக விளையாடினார். 9 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள வருண் ஆரோன் மொத்தம் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அடிக்கடி காயம் ஏற்பட்டதால், இவரால் நீடித்த நாள்களுக்கு இந்தியாவுக்காக விளையாட முடியாமல் போனது.
35 வயதுடைய வருண் ஆரோன் கடந்த ஜனவரியில் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஓய்வுக்குப் பிறகு கிரிக்கெட்டை அலசி ஆராய்ந்து பேசும் நிபுணராகச் செயல்பட்டு வருகிறார். 2024 மத்தியிலிருந்து சென்னையிலுள்ள எம்ஆர்எஃப் வேகப்பந்துவீச்சு அகாடெமியில் ஆலோசகராகச் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், ஐபிஎல் 2026-க்கு முன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக வருண் ஆரோன் நியமிக்கப்பட்டுள்ளார். டேனியல் வெட்டோரி தலைமையிலான பயிற்சியாளர்கள் குழுவில் பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருந்த ஜேம்ஸ் ஃபிராங்க்லின் நீக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2024-ல் இறுதிச் சுற்று வரை முன்னேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் 2025-ல் புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் போனது.
வருண் ஆரோன் உள்நாட்டு கிரிக்கெட்டில் பரோடா, தில்லி மற்றும் ஜார்க்கண்ட் அணிக்களுக்காக விளையாடினார். ஐபிஎல் போட்டியில் தில்லி டேர்டெவில்ஸ், குஜராத் டைடன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
குஜராத் டைடன்ஸ் ஐபிஎல் கோப்பையை வென்றபோது, அந்த அணியில் வருண் ஆரோனும் இடம்பெற்றிருந்தார். ஐபிஎல் போட்டியில் மொத்தம் 52 ஆட்டங்களில் 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
James Franklin | IPL | IPL 2026 | Sunrisers Hyderabad | SRH | Varun Aaron