
பிசிசிஐயின் அடுத்த தலைவராக தில்லியின் முன்னாள் கேப்டன் மிதுன் மனாஸ் தேர்வாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிசிசிஐ தலைவர் பதவிக்குப் போட்டியிட மிதுன் மனாஸ் மட்டும் விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பிசிசிஐ-யின் 36-வது தலைவராக ரோஜர் பின்னி அக்டோபர் 2022-ல் பொறுப்பேற்றுக் கொண்டார். 70 வயதைப் பூர்த்தி செய்ததால், செப்டம்பர் தொடக்கத்தில் பிசிசிஐ தலைவர் பொறுப்பிலிருந்து ரோஜர் பின்னி விலகிக் கொண்டார். பிசிசிஐ விதிப்படி ஒருவர் 70 வயதை அடைந்தவுடன், அவர் பதவி விலகிக்கொள்ள வேண்டும். 70 வயதுக்கு மேல் எவ்விதப் பதவியையும் வகிக்கக் கூடாது. பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா இடைக்காலமாகத் தலைவர் பதவியை வகித்து வருகிறார்.
ஐபிஎல் தலைவர் அருண் துமால் 6 ஆண்டுகளாக நிர்வாகப் பணிகளைக் கவனித்து வருவதால், அவரும் கட்டாய இடைவெளியை எடுத்துள்ளார். எனவே, செப்டம்பர் 28-ல் வருடாந்திரப் பொதுக்கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் மற்றும் ஐபிஎல் தலைவர் உள்பட பல்வேறு பதவிகளுக்கானத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பிசிசிஐ மூத்த நிர்வாகிகள் சார்பில் அதிகாரபூர்வமற்ற கூட்டம் ஒன்று தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. ஐசிசி தலைவர் ஜெய் ஷா, பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா, ராஜீவ் சுக்லா, தில்லி கிரிக்கெட் சங்கத் தலைவர் ரோஹன் ஜெட்லி உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். இதில், பிசிசிஐ-யின் அடுத்த தலைவர் பதவிக்கு மிதுன் மனாஸ் பற்றி பேசப்பட்டுள்ளது.
பிசிசிஐ தலைவர் பதவிக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். சனிக்கிழமை நிலவரப்படி மிதுன் மனாஸ் மட்டுமே வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். எனவே, ஞாயிறு வரை யாரும் வேட்புமனுவைத் தாக்கல் செய்யாவிட்டால், மிதுன் மனாஸ் பிசிசிஐ-யின் புதிய தலைவராகப் போட்டியின்றித் தேர்வாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசிஐ பொருளாளராக ரகுராம் பட் தேர்வாகலாம் எனத் தெரிகிறது. இவர் தற்போது கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத் தலைவராக உள்ளார்.
யார் இந்த மிதுன் மனாஸ்?
மிதுன் மனாஸ் அக்டோபரில் 46 வயதை அடைகிறார். ஜம்முவில் பிறந்த இவர், உள்நாட்டு கிரிக்கெட்டில் தில்லிக்காக விளையாடினார். 1997-98 முதல் 2016-17 வரை மொத்தம் 157 முதல் தர ஆட்டங்களில் விளையாடியுள்ள மிதுன் மனாஸ், தில்லி அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.
2015-ல் தில்லியிலிருந்து ஜம்மு-காஷ்மீருக்கு அணி மாறினார். அடுத்த ஆண்டே உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். முதல் தர கிரிக்கெட்டில் 45.82 சராசரியில் 9,714 ரன்கள் எடுத்துள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 45.84 சராசரியில் 4,126 ரன்கள் எடுத்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் தில்லி டேர்டெவில்ஸ் (தில்லி கேபிடல்ஸ்), புனே வாரியர்ஸ் இந்தியா, சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, 19 வயதுக்குள்பட்ட வங்கதேச அணியின் பேட்டிங் ஆலோசகராக இருந்துள்ளார். ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகளுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.
Mithun Manhas | BCCI President |