சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற இதுவே சரியான நேரம் என்று இங்கிலாந்து ஆல் ரவுண்டர் மொயீன் அலி தெரிவித்துள்ளார்.
2014 முதல் 68 டெஸ்ட், 138 ஒருநாள், 92 டி20 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார் மொயீன் அலி. 2022 டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் இவர் இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில் வரவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மொயீன் அலி இடம் பெறாததைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடைசியாக 2023-ல் ஒருநாள் மற்றும் டெஸ்டில் பங்கேற்ற இவர் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் விளையாடினார்.
தனது ஓய்வு குறித்து டெய்லி மெயிலுக்கு அளித்த பேட்டியில், “எனக்கு 37 வயது ஆகிறது, இந்த மாதம் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் எனக்கு இடம் கிடைக்கவில்லை. நான் இங்கிலாந்து அணிக்காக நிறைய ஆட்டங்களில் விளையாடி உள்ளேன். இது அடுத்த தலைமுறைக்கான நேரம், இது குறித்து எனக்கு விளக்கப்பட்டது. நான் எனது கடமையை முடித்துவிட்டதாக கருதுகிறேன். எனவே, ஓய்வு பெற இதுவே சரியான நேரம்” என்று தெரிவித்துள்ளார்.