யூரோ கோப்பை இன்று முதல் தொடக்கம்: மலைக்க வைக்கும் பரிசுத்தொகை

முதல் ஆட்டத்தில் ஜெர்மனி - ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன.
யூரோ கோப்பை கால்பந்து 2024
யூரோ கோப்பை கால்பந்து 2024@EURO2024
1 min read

24 அணிகள் பங்கேற்கும் யூரோ கால்பந்து போட்டி இன்று தொடங்குகிறது.

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் கலந்து கொள்ளும் யூரோ கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 17-வது யூரோ கால்பந்து போட்டி ஜெர்மனியில் ஜூன் 14 தொடங்கி ஜூலை 14 வரை நடைபெறுகிறது.

இப்போட்டியை நடத்தும் ஜெர்மனி, நடப்பு சாம்பியனான இத்தாலி, கடந்த முறை 2-வது இடம் பிடித்த இங்கிலாந்து அணி உட்பட 24 அணிகள் கலந்து கொள்கின்றன. பெர்லின், டார்ட்மண்ட், முனிச், உட்பட 10 மைதானங்களில் மொத்தம் 51 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களின் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். புள்ளிகள் பட்டியலில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். மேலும், லீக் சுற்றில் 3-வது இடம் பிடித்த அணிகளில் இருந்து சிறந்த 4 அணிகளும் நாக் அவுட் சுற்றில் இணையும். எனவே மொத்தமாக 16 அணிகள் நாக் அவுட் சுற்றில் விளையாடும். இதன் பிறகு கால் இறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறும். இறுதிச் சுற்று ஜூலை 14 அன்று பெர்லின் நகரில் நடைபெறவுள்ளது.

இந்திய நேரப்படி ஆட்டங்கள் அனைத்தும் நள்ளிரவு 12.30 மணி, மாலை 6.30 மணி, இரவு 9.30 மணி ஆகிய நேரங்களில் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டங்கள் முழுவதும் சோனி டென் சேனல் மற்றும் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பப்படுகிறது.

யூரோ கால்பந்து போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை இந்திய மதிப்பில் ரூ. 2765 கோடி என அறிவிக்கப்பட்டது. இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ. 67 கோடி பரிசாக வழங்கப்படும். இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 42 கோடி பரிசாக வழங்கப்படும். 3 மற்றும் 4-வது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு ரூ. 34 கோடி பரிசாக வழங்கப்படும். இப்போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிக்கும் தலா ரூ. 78 கோடி வழங்கப்படும்.

முதல் ஆட்டத்தில் இன்று ஜெர்மனி - ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in