
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 4 சதங்களுடன் பெரிய ஸ்கோரை எடுக்கும் என்றார் கங்குலி. முதல்நாள் முடிவில் இந்திய ரசிகர்களும் இந்திய அணி எப்படியும் 500 ரன்களுக்கு மேல் எடுக்கும் என்று ஆசைப்பட்டார்கள். இதெல்லாம் ஷுப்மன் கில் ஆட்டமிழக்கும் வரைதான். அவருக்குப் பிறகு இந்திய அணி அநியாயமாக 41 ரன்களுக்கு மீதி (7) விக்கெட்டுகளை இழக்க முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் தான் கிடைத்தது.
ரிஷப் பந்த் தன்னுடைய 7-வது சதத்தை இன்று எட்டினார். கில் 147 ரன்களுக்கும் பந்த் 134 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணியின் கீழ்வரிசை பேட்டர்கள் மோசமான விளையாடினார்கள். 3 பேர் சதமடித்தும் 500 ரன்களை எடுக்காமல் இருப்பது அபூர்வம் தான். அப்படியொரு பட்டியலில் இந்திய அணி இன்று இணைந்தது. இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ், டங் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய வந்தபோது மேகங்கள் திரண்டு வந்து இந்திய அணிக்குச் சாதகமான சூழலை உருவாக்கியது. ஆனால் வழக்கம்போல பும்ரா மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தினார். கிராலியை 4 ரன்களுக்கு வீழ்த்தினார் பும்ரா. அதன்பிறகு பென் டக்கெட்டும் ஆலி போப்பும் அதிரடியாக விளையாடினார்கள். 62 ரன்கள் எடுத்திருந்த பென் டக்கெட்டையும் பும்ரா தான் வீழ்த்தினார். பாஸ்பால் கிரிக்கெட்டை அச்சு அசலாக விளையாடிய ஆலி போப் 125 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் சதமடித்தார். இது அவருடைய 9-வது டெஸ்ட் சதம். பிறகு ரூட்டை 28 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார்... வேறு யார் பும்ரா தான். கடைசி ஓவரில் பும்ரா மூன்று நோ பால்களை வீசினார். ஒரு நோ பாலில் புரூக்கின் விக்கெட்டை வீழ்த்தினார். ஒரு நல்ல வாய்ப்பு வீணானது. இங்கிலாந்து அணி 2-வது நாள் முடிவில் 49 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்து வலுவான பதிலடியைத் தந்துள்ளது.