
கொல்கத்தாவில் நடைபெறவுள்ள முதல் டி20 ஆட்டத்துக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிக்கு முன்பு, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டி20 ஆட்டம் கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
இதற்கான இங்கிலாந்து அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், விளையாடும் லெவனை இங்கிலாந்து பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் தற்போது வெளியிட்டுள்ளார்.
ஜாஸ் பட்லர் தலைமையிலான அணியில் பென் டக்கெட், ஃபில் சால்ட் தொடக்க பேட்டர்களாக விளையாடுகிறார்கள். ஹாரி புரூக், லியம் லிவிங்ஸ்டன், ஜேகப் பெத்தெல், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளார்கள்.
இங்கிலாந்து வெள்ளைப் பந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பை மெக்கல்லம் ஏற்ற பிறகு நடைபெறும் முதல் ஆட்டம் இது.
இங்கிலாந்து கடைசியாக கடந்த நவம்பரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி 3-1 என்ற கணக்கில் கோப்பையை வென்றது.