
லார்ட்ஸ் டெஸ்டில் தாமதமாகப் பந்துவீசியதற்காக இங்கிலாந்து அணிக்கு இரு டபிள்யுடிசி புள்ளிகள் மற்றும் ஆட்ட ஊதியத்திலிருந்து 10% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. கடைசி பகுதி வரை பரபரப்பாகச் சென்ற இந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த டெஸ்டில் பந்துவீச பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பந்துவீசுவதற்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் கூடுதல் நேரத்தை எடுத்துக்கொண்டது. பென் ஸ்டோக்ஸ் இந்தத் தவறை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதன் அடிப்படையில் இங்கிலாந்துக்கு இரு டபிள்யுடிசி புள்ளிகள் மற்றும் ஆட்ட ஊதியத்திலிருந்து 10% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக டபிள்யுடிசி புள்ளிகள் பட்டியலில் இங்கிலாந்து அணி 24-ல் இருந்து 22 புள்ளிகளுக்கு சரிந்துள்ளது. இங்கிலாந்தின் சதவீதப் புள்ளிகள் 66.67%-ல் இருந்து 61.11% ஆக சரிந்துள்ளது. இதனால், இரண்டாவது இடத்திலிருந்த இங்கிலாந்து தற்போது மூன்றாவது இடத்துக்கு இறங்கியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விதி16.11.2-ன் படி, ஓர் அணி அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் எத்தனை ஓவர்களை குறைவாக வீசுகிறதோ அத்தனை புள்ளிகள் அபராதமாக விதிக்கப்படும். இங்கிலாந்து அணி அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குள் இரு ஓவர்கள் குறைவாக வீசியிருக்கிறது. இதனால், இங்கிலாந்துக்கு இரு டபிள்யுடிசி புள்ளிகள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்திலிருந்து 3-வது இடத்துக்கு சரிந்துள்ளது இங்கிலாந்து. முதலிரு இடங்களில் ஆஸ்திரேலியா (100) மற்றும் இலங்கை (66.67) அணிகள் உள்ளன.
Ind v Eng | Ind vs Eng | Lord's Test | Team England | Ben Stokes | ICC | WTC Points |WTC Docking Points | WTC Points Table | WTC Tally | India v England | India vs England | India Tour of England | India England Test Series