ஆஷஸில் இடமில்லை: ஓய்வை அறிவித்தார் கிறிஸ் வோக்ஸ்! | Chris Woakes |

சர்வதேச கிரிக்கெட்டில் கடைசியாக, இந்தியாவுக்கு எதிரான ஓவல் டெஸ்டில் கையில் ஸ்லிங் அணிந்து ஒற்றைக் கையுடன் களமிறங்கினார்.
ஆஷஸில் இடமில்லை: ஓய்வை அறிவித்தார் கிறிஸ் வோக்ஸ்! | Chris Woakes |
ANI
2 min read

ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்படாததைத் தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கிறிஸ் வோக்ஸ் (36) அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணித் தேர்வின் திட்டங்களில் கிறிஸ் வோக்ஸ் இல்லை என இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குநர் ராப் கீ வெளிப்படையாகக் கூறியது அவரை இம்முடிவை எடுக்கச் செய்துள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் பந்தை ஸ்விங் செய்வதில் வல்லமை படைத்தவராகவும் முன்னணி ஆல்-ரவுண்டராகவும் அறியப்படும் கிறிஸ் வோக்ஸ், அந்த அணிக்காக முதலில் டி20யில் தான் அறிமுகமானார். ஜனவரி 2011-ல் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். 2013-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் ஓவலில் அறிமுகமானார்.

இங்கிலாந்துக்காக 62 டெஸ்டுகளில் விளையாடியுள்ள வோக்ஸ், பந்துவீச்சில் 29.61 சராசரியில் 192 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் ஒரு சதம் உள்பட 2,034 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 122 ஆட்டங்களில் 173 விக்கெட்டுகளையும் டி20யில் 33 ஆட்டங்களில் 31 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

2019 உலகக் கோப்பையை வென்ற இயான் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த கிறிஸ் வோக்ஸ் 11 ஆட்டங்களில் மொத்தம் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி மற்றும் நியூசிலாந்து எதிரான இறுதிச் சுற்றுகளில் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் இதில் அடக்கம். 2022 டி20 உலகக் கோப்பையை வென்ற ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியிலும் கிறிஸ் வோக்ஸ் இடம்பெற்றிருந்தார். 2023-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றார். ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வுக்குப் பிறகு, இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக, வேகப்பந்துவீச்சுப் படையை வழிநடத்தி வந்தார்.

கிறிஸ் வோக்ஸ் கடைசியாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினார். ஓவலில் நடைபெற்ற கடைசி டெஸ்டின்போது அவருக்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக கடைசி டெஸ்டில் பாதியிலேயே அவர் விலகினார். இருந்தபோதிலும், இலக்கை விரட்டி விளையாடி வந்த இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டம் மிகவும் நெருக்கமாகச் செல்ல, வோக்ஸின் உதவி இங்கிலாந்துக்குத் தேவைப்பட்டது. கையில் ஸ்லிங் அணிந்திருந்தாலும், ஒற்றைக் கை இருக்கிறது என மிகத் துணிச்சலாகக் களமிறங்கி போராடினார் வோக்ஸ். மறுமுனையில் கஸ் அட்கின்சன் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்ததால், இங்கிலாந்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. டெஸ்ட் தொடர் 2-2 என சமனில் முடிந்தது. ஒரு பந்தைக்கூட எதிர்கொள்ளாதபோதிலும் வெற்றிக்காகப் போராட வேண்டும் என்ற வோக்ஸின் போராட்டக் குணம் அனைவராலும் பரவலாகப் பாராட்டப்பட்டது. ஆனால், இதுவே அவருடைய கடைசி சர்வதேச ஆட்டமாக மாறியுள்ளது.

ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. ஓவல் டெஸ்டில் ஏற்பட்ட தோள்பட்டை காயம் காரணமாக கிறிஸ் வோக்ஸ் கருத்தில் கொள்ளப்படவில்லை. ராப் கீ கூறுகையில், "ஆஷஸ் தொடர் முடிந்த பிறகு, புதிய சுழற்சியை நோக்கி சிந்திக்கத் தொடங்கிவிடுவோம். எனவே, கிறிஸ் வோக்ஸ் தற்போதைக்கு எங்களுடைய திட்டங்களில் இல்லை" என்றார்.

ஆஷஸில் இடம்பெறாததும் ராப் கீ கூறியதும் கிறிஸ் வோக்ஸை ஓய்வு முடிவை நோக்கி நகர்த்தியுள்ளது. இந்நிலையில் தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கான நேரம் வந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்மூலம், அவரது 15 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.

"நேரம் வந்துவிட்டது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற இதுவே சரியான நேரம். 2011-ல் ஆஸ்திரேலியாவில் அறிமுகமானது நேற்று போல் உள்ளது. இரு உலகக் கோப்பைகளை வென்றது, சில அற்புதமான ஆஷஸ் தொடர்களில் விளையாடியது எல்லாம் நான் சாத்தியம் என்று நான் ஒருபோதும் நினைத்ததே இல்லை. அந்த நினைவுகள், சக வீரர்களுடன் கொண்டாடிய கொண்டாட்டங்கள் அனைத்தும் என்றும் நினைவில் இருக்கும்.

அம்மா, அப்பா, மனைவி மற்றும் பிள்ளைகளின் அன்பு, ஆதரவு மற்றும் இத்தனை ஆண்டுகாலத் தியாகங்களுக்காக நன்றி" என்று வோக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

Chris Woakes | England Cricket |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in