பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் அக். 7 அன்று முல்தானில் தொடங்கியது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 556 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷான் மசூத் 151 ரன்கள் அடித்தார்.
இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக புரூக் 317 ரன்களும், ஜோ ரூட் 262 ரன்களும் எடுத்தனர்.
2-வது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி 4-வது நாள் முடிவில் 152 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்தது.
5-வது நாளில் சல்மான் அலி - ஆமீர் ஜமால் கூட்டணி அமைத்து, பாகிஸ்தான் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்ற போராடினர். இருவரும் அரைசதம் அடித்தனர்.
ஒரு கட்டத்தில் ஜேக் லீச்சின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான் அணி.
உடல்நிலை பாதிப்பால் அப்ரார் அஹமது பேட்டிங் செய்ய வராத நிலையில் பாகிஸ்தான் அணி 220 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக சல்மான் அலி 63 ரன்கள் எடுத்தார். ஜேக் லீச் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் இந்த டெஸ்டில் பாகிஸ்தான் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஹாரி புரூக் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஒரு இன்னிங்ஸில் 500 ரன்களுக்கு மேல் அடித்தும், இன்னிங்ஸ் தோல்வி கண்ட முதல் அணி எனும் மோசமான சாதனையை படைத்துள்ளது பாகிஸ்தான்.
அதேபோல், முதல் இன்னிங்ஸில் 500 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த்உ, இறுதியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற முதல் அணி என்கிற சாதனையை படைத்துள்ளது இங்கிலாந்து அணி.
2021-க்கு பிறகு, சொந்த மண்ணில் முதல் வெற்றிக்காக இன்னும் போராடி வருகிறது பாகிஸ்தான் அணி.
இந்த வெற்றியின் மூலம் 3 டெஸ்டுகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் அக். 15 அன்று தொடங்குகிறது.