
வெலிங்டன் டெஸ்டில் 323 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து சாதனை படைத்துள்ளது.
நியூசிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 6 அன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஹாரி புரூக் அதிரடியாக சதமடித்த இங்கிலாந்து 280 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 125 ரன்களுக்குச் சுருண்டது.
155 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து, 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 378 ரன்கள் குவித்து 533 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
மூன்றாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து ஆதிக்கத்தைத் தொடர, ஜோ ரூட் 36-வது டெஸ்ட் சதத்தை அடித்து ஆட்டமிழந்தார். 427 ரன்கள் குவித்திருந்தபோது, ஆலி போப் ஆட்டமிழக்க, இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார் பென் ஸ்டோக்ஸ். அப்போது 49 ரன்களுடன் அவர் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
583 ரன்கள் என்ற பிரமாண்ட இலக்கை நோக்கி களமிறங்கியது நியூசிலாந்து. இங்கிலாந்து பந்துவீச்சில் தடுமாறிய நியூசிலாந்து பேட்டர்கள் வந்ததும் போனதுமாக இருந்தார்கள். 59 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. 141 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது.
விக்கெட் கீப்பர் டாம் பிளெண்டல் மட்டும் சதமடித்து போராடினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்து நேதன் ஸ்மித் தாக்குப்பிடித்தார். 7-வது விக்கெட்டுக்கு இந்த இணை 96 ரன்கள் சேர்த்த நிலையில், பிளெண்டல் 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி மூன்று விக்கெட்டுகளை ஸ்டோக்ஸ் மிக எளிதாக வீழ்த்தினார். பிளெண்டல் தவிர்த்து மற்ற பேட்டர்கள் யாரும் கைகொடுக்காததால், 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது நியூசிலாந்து.
323 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, 3 டெஸ்டுகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம், 2008-க்குப் பிறகு நியூசிலாந்து மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வெல்கிறது இங்கிலாந்து.
ஆட்டநாயகன் விருதை அதிரடியாக சதமடித்த ஹாரி புரூக் வென்றார்.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் ஹாமில்டனில் டிசம்பர் 14 அன்று தொடங்குகிறது.