
ஐபிஎல் 2025 இறுதிச் சுற்றில் பஞ்சாப் கிங்ஸை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 18 வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக கோப்பையை வென்றது ஆர்சிபி.
விராட் கோலியின் சீருடை எண் 18. 18-வது ஐபிஎல். இம்முறை கோப்பை என ஆர்சிபி ரசிகர்கள் கனவு கண்டிருந்தார்கள். கனவு நனவானது. வெற்றிக்குப் பிந்தைய விராட் கோலியின் கண்ணீர் வெற்றியின் ஆழத்தை உணர்த்தும்.
பேரரசன் தலையில் ஐபிஎல் எனும் மகுடம்!!!!!
191 ரன்கள் எனும் இலக்குடன் பஞ்சாப் கிங்ஸின் இளம் தொடக்க பேட்டர்கள் பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினார்கள். முதல் ஓவரை பவுண்டரியுடன் தொடங்கி சிக்ஸருடன் நிறைவு செய்தார் பிரியான்ஷ் ஆர்யா. அடுத்த மூன்று ஓவர்களில் ரன் வேகத்தை அப்படியே கட்டுப்படுத்தியது ஆர்சிபி. ஜோஷ் ஹேசில்வுட் வீசிய முதல் ஓவரில் பிரப்சிம்ரன் கேட்ச் வாய்ப்பை ரொமாரியோ ஷெப்பெர்ட் தவறவிட்டாலும், அவருடைய அடுத்த ஓவரில் பிரியான்ஷ் ஆர்யா 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சால்ட் பிடித்தது அட்டகாசமான கேட்ச். 6 ஓவர்களில் 52 ரன்கள் எடுத்தது பஞ்சாப்.
பவர்பிளே முடிந்தவுடன் சுழற்பந்துவீச்சாளர்கள் வந்தார்கள். சுயாஷ் சர்மா ஓவரை குறிவைத்து ஜோஷ் இங்லிஸ் மற்றும் பிரப்சிம்ரன் சிங் தலா ஒரு சிக்ஸர் அடித்தார்கள். ஆனால், கிருனாள் பாண்டியா ஆர்சிபியின் திருப்புமுனையாக அமைந்தார். தொடக்கத்தில் இருந்து இயல்பான ஆட்டத்தை விளையாட முடியாமல் தடுமாறி வந்த பிரப்சிம்ரனை (26) வீழ்த்தினார். விக்கெட் மட்டுமில்லாமல் ரன் குவிக்க விடாமல் கட்டுப்படுத்தினார்.
சுயாஷ் சர்மா ரன்கள் கொடுத்ததால், அவரை உடனடியாக நிறுத்தி ஷெப்பெர்டிடம் பந்தைக் கொடுத்தார் ரஜத் படிதார். அடுத்த திருப்புமுனையாக அமைந்தது இந்த ஓவர். பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 1 ரன்னுக்கு வெளியேறினார். 10 ஓவர்களில் 81 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது பஞ்சாப்.
நெருக்கடி மீண்டும் ஆர்சிபி பக்கம் திருப்ப கிருனாள் பாண்டியா மற்றும் ஷெப்பெர்ட் ஓவர்களில் தலா ஒரு சிக்ஸர் அடித்து பஞ்சாப் பேட்டிங்கை உயிர்ப்புடன் வைத்திருந்தார் ஜோஷ் இங்லிஸ். கிருனாள் பாண்டியாவின் கடைசி ஓவரிலும் இதற்கு முயற்சித்து முதல் பந்திலேயே பவுண்டரி எல்லையில் கேட்ச் ஆனார் இங்லிஸ். இவர் 23 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். 4 ஓவர்கள் வீசிய கிருனாள் பாண்டியா 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முக்கிய விக்கெட்டுகளையும் இழந்து வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டும் 14-ஐ தாண்டியதால், அனுபவம் இல்லாத பஞ்சாப் பேட்டர்கள் திணறினார்கள். நேஹல் வதேரா ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்தார். மற்ற பந்துகள் அவருக்குச் சரியாக மாட்டவில்லை. ஷஷாங் சிங் பவுண்டரிகள் அடித்தாலும் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டை அடைய முடியவில்லை. கடைசி 5 ஓவர்களில் 72 ரன்கள் தேவைப்பட்டன.
ஹேசில்வுட் ஓவரில் ஷஷாங்க் சிங் இரு சிக்ஸர்கள் அடித்து சற்று நம்பிக்கை கொடுத்தார். புவனேஷ்வர் குமார் அடுத்த ஓவரிலேயே வதேரா விக்கெட்டை வீழ்த்தினார். மார்கஸ் ஸ்டாய்னிஸும் முதல் பந்தில் சிக்ஸர் அடித்து அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். அஸ்மதுல்லா ஓமர்ஸாயும் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஷஷாங் சிங்கால் மட்டும் என்ன செய்துவிட முடியும். போராடி கடைசி ஓவர் வரை வந்தார். 6 பந்துகளில் 29 ரன்கள் தேவை. ஷஷாங்க் சிங்கால் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி மட்டுமே அடிக்க முடிந்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷஷாங்க் சிங் 30 பந்துகளில் 61 ரன்கள் விளாசினார். பலனளிக்கவில்லை. 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் மட்டுமே பஞ்சாபால் எடுக்க முடிந்தது. 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றது.
ஆர்சிபியின் 18 வருட காத்திருப்பு முடிவுக்கு வந்தது.
முன்னதாக, டாஸ் வென்ற ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அர்ஷ்தீப் சிங் முதல் பந்தை வைடாக வீசி சற்று தடுமாற்றத்துடன் தொடங்கினார். இதே ஓவரில் ஃபில் சால்ட் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து ஆர்சிபிக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தார். கைல் ஜேமிசன் ஓவரிலும் ஒரு பவுண்டரி அடித்த சால்ட், இதே ஓவரில் ஷ்ரேயஸ் ஐயரின் அற்புதமான கேட்சில் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மயங்க் அகர்வால் சற்று வேகமாக விளையாடப் பார்த்தார். விராட் கோலி வழக்கமான அதிரடியை வெளிப்படுத்தாமல் தடுப்பாட்டத்தில் விளையாடியதுபோல இருந்தது. 6 ஓவர்களில் 55 ரன்கள் எடுத்தது ஆர்சிபி. ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமானதாக இருந்ததால், இது குறைவான ரன்களாகவே பார்க்கப்பட்டது.
பவர்பிளே முடிந்தவுடன் யுஸ்வேந்திர சஹலை கொண்டு வந்தார் ஷ்ரேயஸ் ஐயர். முதல் ஓவரிலேயே அகர்வால் (24) ஆட்டமிழந்தார். அடுத்த 4 ஓவர்களில் ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதத்திலேயே ஆர்சிபி விளையாடியது. இதனால், 10 ஓவர்களில் 87 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள். பஞ்சாப் பந்துவீச்சாளர்களும் அவர்களுடயை வேகம் குறைந்த பந்தை ஷார்ட்டாக வீசும் யுத்தியைக் கடைபிடித்து சரியாகச் செயல்படுத்தினார்கள். ஜேமிசன் ஓவரில் சிக்ஸர் அடிக்க முயன்று அதிரடிக்கு மாறப் பார்த்த ரஜத் படிதார் 26 ரன்களுக்கு இதே ஓவரில் ஆட்டமிழந்தார். ரன் வேகத்தை அதிகரிக்க வேண்டிய நேரத்தில் எல்லாம் ஆர்சிபி பேட்டர்கள் நடையைக் கட்டிக் கொண்டிருந்தார்கள்.
ஜிதேஷ் சர்மாவுக்கு முன்பு லியம் லிவிங்ஸ்டன் களமிறங்கினார். படிதார் விக்கெட்டுக்கு பிறகு இரு ஓவர்களில் ஒரு பவுண்டரிகூட இல்லை. சஹல் ஓவரில் லிவிங்ஸ்டன் ஒரு சிக்ஸர், கோலி ஒரு பவுண்டரி அடித்து சற்று ஆட்டத்தின் போக்கை மாற்ற முயற்சித்தார்கள். ஆனால், 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து பெரிய இன்னிங்ஸாக மாற்றத் தவறி ஓமர்ஸாயின் வேகம் குறைந்த ஷார்ட் பந்தில் ஆட்டமிழந்தார் கோலி. தவறான நேரத்தில் மீண்டும் ஒரு விக்கெட். 15 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்திருந்தது ஆர்சிபி.
உள்ளே வந்தார் ஜிதேஷ் சர்மா. அர்ஷ்தீப் சிங் ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகள் அடித்தார். கைல் ஜேமிசன் வேகம் குறைந்த ஷார்ட் பந்தை வீசப்போகிறார் என்பதைக் கணித்து பின்பக்கமாக ஒரு சிக்ஸரை நொறுக்கிவிட்டார். பிறகு, இறங்கி வந்து ஒரு சிக்ஸரை விளாசினார். ஆர்சிபி பேட்டிங்கில் இப்போது தான் உயிர் வந்ததுபோல இருந்தது. லிவிங்ஸ்டனும் இதே ஓவரில் சிக்ஸரை அடிக்க ஆர்சிபி 17-வது ஓவரில் 23 ரன்கள் எடுத்தது. இதே ஓவரில் லிவிங்ஸ்டன் (25) ஃபுல் டாஸ் பந்தில் ஆட்டமிழந்தார். 10 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த ஜிதேஷ் சர்மாவும் அடுத்த ஓவரிலேயே வைஷாக் விஜயகுமாரிடம் ஆட்டமிழந்தார்.
ரொமாரியோ ஷெப்பெர்டும் மற்ற ஆர்சிபி பேட்டர்களை போலவே ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து கடைசி வரை நிற்காமல் 20-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரில் ஒரு பவுண்டரிகூட இல்லாமல் 3 விக்கெட்டுகளை இழந்தது ஆர்சிபி. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது ஆர்சிபி. ஆங்கில மொழி வர்ணனையில் ஆர்சிபி 30 ரன்கள் குறைவாக எடுத்துள்ளதாகக் கூறினார். ஆனால், இறுதிச் சுற்று போன்ற பெரிய ஆட்டங்களில் இலக்கை விரட்டும்போது அழுத்தம் பெரிய பங்கை வகிக்கும் என்பார்கள். இந்த அழுத்தத்திலேயே பஞ்சாப் தோல்வியைத் தழுவியுள்ளது.