இந்த வருடத்துடன் சிபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக டி20 ஜாம்பவான் டுவைன் பிராவோ அறிவித்துள்ளார்.
40 வயதான பிராவோ 2021-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். 2022-ல் ஐபிஎல் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்றார். இதன் பிறகு சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஆனார். மேலும், 2024 டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஆலோசகராகவும் செயல்பட்டார்.
இந்த வருடத்துடன் சிபிஎல் போட்டியிலிருந்து பிராவோ ஓய்வு பெறுவதால் மற்ற டி20 லீக் போட்டிகளில் அவர் விளையாடுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐஎல்டி20 போட்டியில் எம்ஐ எமிரேட்ஸ் அணியிலும், அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியிலும் பிராவோ இடம்பெற்றுள்ளார். தற்போது சிபிஎல்-லில் இருந்து மட்டுமே பிராவோ ஓய்வு பெற்றிருப்பதால் இவ்விரு டி20 லீக் போட்டிகளிலும் அவர் தொடர்ந்து விளையாடுவார் என்று நாம் எதிர்பார்க்கலாம்.