மே.இ. தீவுகள் கேப்டன் பொறுப்பிலிருந்து பவெல் நீக்கம்: பிராவோ காட்டம்

"வீரர்களுக்கு எதிரான அநீதி தொடர்கிறது என்பதை கரீபியன் மற்றும் கிரிக்கெட் உலகுக்கு மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளீர்கள்."
மே.இ. தீவுகள் கேப்டன் பொறுப்பிலிருந்து பவெல் நீக்கம்: பிராவோ காட்டம்
1 min read

மேற்கிந்தியத் தீவுகள் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து ரோவ்மன் பவெல் நீக்கப்பட்டதற்கு முன்னாள் வீரர் டுவெயின் பிராவோ கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் கேப்டனாக கிரெய்க் பிராத்வைட் 2021-ல் பொறுப்பேற்றார். இவருடையத் தலைமையில் 2024-ல் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்றது மேற்கிந்தியத் தீவுகள். மேலும், நடப்பாண்டு தொடக்கத்தில் 1990-க்கு பிறகு முதல்முறையாக பாகிஸ்தானில் டெஸ்ட் வெற்றியைப் பெற்றது பிராத்வைட் தலைமையிலான அணி.

டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து இவர் விலகியுள்ளார். இவருக்கு அடுத்து யார் கேப்டன் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. 2025/27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் முதல் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது மேற்கிந்தியத் தீவுகள்.

அதேசமயம், டி20 கேப்டனாக ரோவ்மன் பவெலுக்குப் பதில் ஷை ஹோப் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஷை ஹோப் ஏற்கெனவே மேற்கிந்தியத் தீவுகளின் ஒருநாள் கேப்டனாக உள்ளார். ரோவ்மன் பவெல் 2023 முதல் மேற்கிந்தியத் தீவுகளை டி20யில் வழிநடத்தி வந்துள்ளார். ஜூன் மாதம் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து பயணத்திலிருந்து டி20 கேப்டன் பொறுப்பை ஏற்கிறார் ஷை ஹோப்.

டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து ரோவ்மன் பவெல் நீக்கப்பட்டதற்கு முன்னாள் வீரர் டுவெயின் பிராவோ மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.

இதுதொடர்புடைய பிராவோவின் பதிவு

"வீரர்களுக்கு எதிரான அநீதி தொடர்கிறது என்பதை கரீபியன் மற்றும் கிரிக்கெட் உலகுக்கு மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளீர்கள். முன்னாள் வீரராகவும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் ரசிகராகவும் இது மிக மோசமான முடிவு என்பதை எளிதாகக் கூற முடியும். டி20 அணியின் கேப்டனாக ரோவ்மேன் பவெல் பொறுப்பேற்கும்போது மேற்கிந்தியத் தீவுகள் அணி தரவரிசையில் 9-வது இடத்தில் இருந்தது. இவர் பொறுப்பேற்ற பிறகு தரவரிசையில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. அவருக்கு இப்படிதான் நன்றிக்கடன் செலுத்துவீர்களா? வீரர்கள் மோசமாக நடத்தப்படுவது எப்போது முடிவுக்கு வரும்" என்று பிராவோ குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in