துலீப் கோப்பை 2024-ல் இந்தியா ஏ அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
துலீப் கோப்பை செப். 5 அன்று தொடங்கியது. முதல் சுற்றில் இந்தியா பி அணி இந்தியா ஏ அணியையும், இந்தியா சி அணி இந்தியா டி அணியையும் வீழ்த்தின.
2-வது சுற்றில் இந்தியா ஏ அணி இந்தியா டி அணியை வீழ்த்தியது. இந்தியா சி - இந்தியா பி இடையிலான ஆட்டம் டிரா ஆனது.
இந்நிலையில் 3-வது சுற்று செப். 19 அன்று தொடங்கியது. இதில் இந்தியா டி அணி இந்தியா பி அணியை 257 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரண்டு இன்னிங்ஸிலும் அதிரடியாக விளையாடிய ரிக்கி புய் (56 & 119*) ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியா ஏ அணி இந்தியா சி அணியை 132 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதல் இன்னிங்ஸில் சதமும், 2-வது இன்னிங்ஸில் அரைசதமும் விளாசிய ஷஸ்வத் ராவத் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த ஆட்டத்தில் தமிழக வீரரான சாய் சுதர்சனும் சதம் அடித்தார். ஆனால் அவரின் சதம் அணியின் வெற்றிக்கு உதவவில்லை.
இப்போட்டியில் மொத்தம் 16 விக்கெட்டுகளை வீழ்த்திய அன்ஷுல் கம்போஜ் தொடர் நாயகன் விருதை வென்றார்.
புள்ளிகள் பட்டியலில் மயங்க் அகர்வால் தலைமையிலான இந்தியா ஏ அணி 12 புள்ளிகளை பெற்று முதலிடத்தைப் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்தியா சி அணி 2-வது இடத்தைப் பிடித்தது.