டக்கெட் சதம்: இந்தியாவை வீழ்த்தி 1-0 என முன்னிலை பெற்ற இங்கிலாந்து!
ANI

டக்கெட் சதம்: இந்தியாவை வீழ்த்தி 1-0 என முன்னிலை பெற்ற இங்கிலாந்து!

டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்தின் இரண்டாவது அதிகபட்ச சேஸிங் இது.
Published on

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 371 ரன்கள் என்ற வெற்றி இலக்கை அடைந்து இங்கிலாந்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது.

இங்கிலாந்து, இந்தியா இடையிலான கடைசி டெஸ்ட் லீட்ஸில் நடைபெற்றது. நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்தது. கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றிக்கு 350 ரன்களும் இந்தியாவின் வெற்றிக்கு 10 விக்கெட்டுகளும் தேவை என்ற நிலை இருந்தது.

நான்காவது நாள் ஆட்டத்தில் இந்தியா செய்ததைப்போல கடைசி நாள் ஆட்டத்தின் முதல் பகுதியில் இங்கிலாந்து தொடக்க பேட்டர்கள் ஸாக் கிராலே மற்றும் பென் டக்கெட் களத்தில் நேரத்தை செலவிட்டு நிதானம் காட்டினார்கள். முதல் விக்கெட்டுக்கு இருவரும் முதலில் 50 ரன்களை சேர்த்தார்கள். அடுத்து 100 ரன்களை சேர்த்தார்கள். விக்கெட் கிடைக்காததால், இந்தியா சற்று பதற்ற நிலையை அடைந்தது. உணவு இடைவேளையில் இங்கிலாந்து 117 ரன்கள் எடுத்தது.

உணவு இடைவேளைக்குப் பிறகு இருவரும் ரன் குவிக்கும் வேகத்தை அதிகரித்தார்கள். குறிப்பாக ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் மூலம் ஜடேஜாவின் அச்சுறுத்தலைத் தகர்த்தார் டக்கெட். இங்கிலாந்து 150 ரன்களை கடக்க டக்கெட் சதத்தைக் கடந்தார். தவறவிடப்பட்ட கேட்ச் வாய்ப்புகளைப் பயன்படுத்தியதோடு அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இங்கிலாந்தை நல்ல நிலையில் அமரச் செய்தார்.

முதல் விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்தபோது, பிரசித் கிருஷ்ணா பந்தில் கிராலே (65) ஆட்டமிழந்தார். பிரசித் கிருஷ்ணாவின் அடுத்த ஓவரிலேயே ஆலி போப் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இந்தியா முயற்சித்தது.

ஜோ ரூட் தனது அனுபவத்தைக் கொண்டு வர டக்கெட் தொடர்ந்து சிறப்பாக பேட் செய்து இங்கிலாந்தை 250 ரன்களை கடக்கச் செய்தார். 149 ரன்கள் எடுத்த டக்கெட், ஷார்துல் தாக்குர் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹாரி புரூக் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

இந்த நேரத்தில் இங்கிலாந்து வெற்றிக்கு 118 ரன்கள் தேவைப்பட்டதால் ஆட்டத்தைக் கையிலெடுக்க இந்தியா முயற்சித்தது. ஆனால், ரூட் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மிகப் பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெற்றிக்கு அருகே இங்கிலாந்தை அழைத்துச் சென்றார்கள். ஜடேஜாவின் சுழலைக் குறிவைக்க ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டாக விளையாடி வந்தார் ஸ்டோக்ஸ். ஒரு கட்டத்தில் ஷுப்மன் கில் ஃபீல்டிங்கை மாற்ற, ஸ்விட்ச் ஹிட்டுக்கு மாறினார் ஸ்டோக்ஸ். முதல் ஷாட்டிலேயே 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்தியா மீண்டும் வெற்றியை நோக்கி பயணிக்க முயற்சித்தது. ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை. புதிய பந்தை எடுத்தும் பலன் தரவில்லை. ஜோ ரூட் அரை சதம் அடித்தார். ஜேமி ஸ்மித் கடைசி வரை நின்று இங்கிலாந்து வெற்றியை உறுதி செய்தார். 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 373 ரன்கள் எடுத்த இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்தின் இரண்டாவது அதிகபட்ச சேஸிங் இது.

நான்காவது இன்னிங்ஸில் சதமடித்த டக்கெட் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த வெற்றியின் மூலம் 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி சார்பில் 5 சதங்கள் அடித்தும் இந்தியா தோல்வியைச் சந்தித்திருப்பது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. ஷுப்மன் கில்லின் டெஸ்ட் கேப்டன் பயணம் தோல்வியுடன் தொடங்கியுள்ளது.

முன்பு, முதல் இன்னிங்ஸில் இந்தியா 471 ரன்களும் இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 371 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

logo
Kizhakku News
kizhakkunews.in