

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் டக்கெட் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
இருந்தபோதிலும், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அவருக்கு பக்கபலமாக இருப்பேன் என உறுதியளித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்துள்ள இங்கிலாந்து டெஸ்ட் அணி ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று டெஸ்டுகளிலும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து ஆஷஸை வெல்லும் கனவை இழந்தது இங்கிலாந்து.
பிரிஸ்பேனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் தோல்வியடைந்த பிறகு, இங்கிலாந்து அணி நூசா எனும் இடத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்தது. ஆஸ்திரேலியாவில் அது ஒரு சுற்றுலாத் தலம். சன்ஷைன் கோஸ்ட் ரெசார்ட் டவுனில் இங்கிலாந்து வீரர்கள் பொழுது கழித்தார்கள்.
இரு தோல்விகளுக்குப் பிறகு வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில், இங்கிலாந்து வீரர்களின் இந்த நான்கு நாள் பயணம் பெரும் பேசுபொருளானது.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இதை இங்கிலாந்து வீரர்களுக்கான விடுப்பாகவும் கருதவில்லை. தலைமைப் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல் ஓராண்டுக்கு முன்பே திட்டமிட்ட ஏற்பாடு. வீரர்களுக்கு புத்துணர்வை ஏற்படுத்தும் என்ற நோக்கில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், வீரர்கள் சிலர் பயிற்சியைப் புறக்கணித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்தப் பயணத்துக்குப் பிறகு, அடிலெய்டில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்டிலும் தோல்வியடைந்து ஆஷஸ் கனவை இழந்தது இங்கிலாந்து. வெறும் 11 நாள்களுக்குள் ஆஷஸை தக்கவைத்து ஆஸ்திரேலியா சாதனை படைத்தது.
அடிலெய்ட் தோல்விக்குப் பிறகு, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. நூசாவில் இங்கிலாந்து தொடக்க பேட்டர் பென் டக்கெட் அளவுக்கு அதிகமாக மது அருந்திய நிலையில், விடுதிக்குச் செல்ல வழி தெரியாமல் தடுமாறியது போல காணொளி ஒன்று இணையத்தில் கசிந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆஷஸிலும் மோசமாகவே விளையாடி வருகிறார் டக்கெட். கடைசி 12 சர்வதேச இன்னிங்ஸில் ஓர் அரை சதம் கூட அடிக்காமல் விளையாடி வருகிறார் டக்கெட். ஆஷஸில் 6 இன்னிங்ஸில் ஒருமுறை கூட 30 ரன்களை அவர் கடக்கவில்லை.
இங்கிலாந்து அணியுடன் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய நிர்வாக இயக்குநர் ராப் கீ பயணம் செய்யவில்லை. டக்கெட் சர்ச்சை குறித்து பேசிய அவர், "எங்களுடைய வீரர்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாகச் சொன்னால் அதுகுறித்து நாங்கள் விசாரிப்போம். ஒரு சர்வதேச கிரிக்கெட் அணி அளவுக்கு அதிகமாக மது அருந்துவது எந்தவொரு நிலையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அது குறித்து விசாரிக்கப்படாமல் இருந்தால் தவறாகிவிடும். ஆனால், நான் கேட்டது வரை, அவர்கள் நன்றாக நடந்துகொண்டிருக்கிறார்கள்" என்றார்.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், "சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் விவகாரத்தைக் கவனத்தில் கொண்டுள்ளோம். உண்மையைக் கண்டறியும் வரை இதுகுறித்து மேற்கொண்டு கருத்து தெரிவிக்க மாட்டோம்" என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் பென் டக்கெட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளார் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ். மெல்போர்னில் நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் இடம்பெற்றுள்ளார்.
ஸ்டோக்ஸ் கூறுகையில், "அவரிடம் பேசியிருக்கிறேன். என் முழு ஆதரவையும் அவரிடம் வழங்கினேன். அணியில் அவர் முக்கியமான வீரர். இன்னும் இரு டெஸ்டுகள் மீதமுள்ளன. அணியில் மிக முக்கியமான வீரர் அவர். இது எந்தளவுக்குப் பாதிப்பை உண்டாக்கும் என்பதற்கான அனுபவம் எனக்கு உள்ளது. எப்போது என் வீரர்களுக்குப் பக்கபலமாக இருப்பேன். குறிப்பாக இது போன்ற தருணங்களில் பக்கபலமாக இருப்பேன். இங்கிலாந்து கேப்டனாக என் பணி என்பது அணிக்கான முடிவைப் பெற்றுத் தருவது. அதேசமயம், வீரர்கள் மிகச் சிறந்த மனநிலையில் இருப்பதற்கான சூழலை உருவாக்கவும் முயற்சிக்க வேண்டும்.
அவர்களுக்கு ஆதரவாக இருப்பதும், உடனுக்குடன் உறுதுணையாக இருப்பேன் என்பதை அவர்களிடத்தில் தெரியப்படுத்துவதும் மிக முக முக்கியமானது. பென் டக்கெட்டுக்கு அது தெரியும்" என்றார் ஸ்டோக்ஸ்.
டக்கெட் ஏதேனும் தவறு செய்தாரா என்ற கேள்விக்கு, "நான் அவருக்கு ஆதரவளிக்கிறேன். என் வீரர்களுக்கு ஆதரவாக எப்போதும் துணை நிற்பேன். இதை நான் தெளிவுபடுத்திவிட்டேன்" என்றார் ஸ்டோக்ஸ்.
Ashes | Ben Duckett | Team England | Noosa | Ben Stokes | Rob Key |