ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிடின் பதவி காலம் டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் முடிவடைந்தது.
2021 டி20 உலகக் கோப்பை முடிந்தவுடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றார் ராகுல் டிராவிட். இவரது தலைமையில் இந்திய அணி 2023 ஆசிய கோப்பையை வென்றது.
2022 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதன் பிறகு 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்று மற்றும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதி சுற்றில் ஆஸ்திரேலிய அணியுடன் தோல்வி அடைந்தது.
இதைத் தொடர்ந்து அவரது பயணம் டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக அவர் ராஜஸ்தான் அணியுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக டிராவிட் செயல்பட்டார். இதைத் தொடர்ந்து 2014 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் முறையே ராஜஸ்தான் அணியின் இயக்குநராகவும், ஆலோசகராகவும் செயல்பட்டார்.
இந்நிலையில் அவர் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு திரும்பவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ராத்தோர் ராஜஸ்தான் அணியின் துணைப் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
2021 முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குநராக செயல்பட்ட குமார் சங்கக்காரா அதன் பிறகு ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் செயல்பட்டார். இந்நிலையில் தலைமைப் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்படும் பட்சத்தில் சங்கக்காரா எஸ்ஏடி20 மற்றும் சிபிஎல் போட்டிகளில் ராயல்ஸ் அணியுடன் பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.