உலகக் கோப்பை பரிசுத்தொகையைக் குறைத்துக் கொண்ட டிராவிட்: தகவல்

முன்னதாக, 2018-ல் நடைபெற்ற யு-19 உலகக் கோப்பையை வென்ற பிறகும், டிராவிட் இதுபோன்ற ஒரு முடிவை எடுத்தார்.
டிராவிட்
டிராவிட்ANI
1 min read

உலகக் கோப்பை பரிசுத்தொகையை அனைவருக்கும் சமமாக அளிக்குமாறு ராகுல் டிராவிட் வலியுறுத்தியுள்ளார்.

பார்படாஸில் கடந்த ஜூன் 29 அன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.

இதைத் தொடர்ந்து உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ. 125 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார்.

பரிசுத்தொகை விவரம்

சஞ்சு சாம்சன், சஹால், ஜெயிஸ்வால் (ஓர் ஆட்டத்தில் கூட விளையாடாதவர்கள்) உள்பட அணியில் இடம்பெற்ற 15 வீரர்களுக்கும் தலா ரூ. 5 கோடி.

தலைமைப் பயிற்சியாளர் - டிராவிட் - ரூ. 5 கோடி

பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் பயிற்சியாளர்கள் - விக்ரம் ராத்தோர், பராஸ் மாம்ப்ரே, திலீப் ஆகியோருக்கு தலா ரூ. 2.5 கோடி

தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் உட்பட தேர்வுக் குழுவில் இடம்பெற்ற 5 நபர்களுக்குத் தலா ரூ. 1 கோடி

உடற்பயிற்சி உதவியாளர்கள், த்ரோடவுன் உதவியாளர்கள் உட்பட 10 நபர்களுக்கு தலா ரூ. 2 கோடி

மாற்று வீரர்கள் (ரிங்கு சிங், கில், கலீல் அஹமது, அவேஷ் கான்) - தலா ரூ. 1 கோடி

இந்நிலையில் பயிற்சியாளர்கள் அனைவருக்கும் சமமாகப் பரிசுத்தொகை வழங்கப்பட வேண்டும் என்று டிராவிட் பிசிசிஐயிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் பிசிசிஐ அதிகாரி ஒருவர், “டிராவிட், சகப் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 2.5 கோடி பரிசுத்தொகையே தனக்கும் போதும் என்றார். அவரின் முடிவை நாங்கள் மதிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

டிராவிடின் இந்த முடிவைப் பலரும் பாராட்டி வருகின்றனர். முன்னதாக, 2018-ல் நடைபெற்ற யு-19 உலகக் கோப்பையை வென்ற பிறகும் ராகுல் டிராவிட் இதுபோன்ற ஒரு முடிவை எடுத்தார்.

அப்போது, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக டிராவிட் செயல்பட்டார். உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு தலா ரூ. 30 லட்சமும், மற்ற பயிற்சியாளர்களுக்கு ரூ. 20 லட்சமும், தலைமைப் பயிற்சியாளரான டிராவிடுக்கு ரூ. 50 லட்சமும் வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்தது.

ஆனால், பயிற்சியாளர்கள் அனைவருக்கும் சமமாகப் பரிசுத்தொகை வழங்கப்பட வேண்டும் என்று டிராவிட் வலியுறுத்த, அதன் பிறகு அனைத்துப் பயிற்சியாளர்களுக்கும் தலா ரூ. 25 லட்சம் வழங்கப்பட்டது. அப்போதும் இப்போதும் பணத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல், சம உரிமைக்கும் கண்ணியத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பதாலேயே தொடர்ந்து அனைவராலும் பாராட்டும் ஒரு மனிதராக உள்ளார் டிராவிட்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in