

இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயருக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து சிவகங்கையைச் சேர்ந்த பொது நல மருத்துவர் அ.ப. ஃபரூக் அப்துல்லா பேஸ்புக் பக்கத்தில் விளக்கியுள்ளார்.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒருநாள் ஆட்டம் கடந்த அக்டோபர் 25 அன்று சிட்னியில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை லாவகமாக கேட்ச் பிடித்தார் இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர்.
பின்னோக்கிச் சென்று இந்த கேட்சை பிடித்தபோது அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதில் நெஞ்சுப் பகுதியில் அவருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது தெரிந்தது. உடனடியாக களத்திலிருந்து அவர் வெளியேறினார்.
இந்தக் காயம் காரணமாக நெஞ்சாங்கூட்டில் ரத்தக் கசிவு இருப்பதாகவும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஷ்ரேயஸ் ஐயர் சிகிச்சையில் இருப்பதாகவும் மருத்துவ ரீதியாக நிலையாக இருப்பதாகவும் குணமடைந்து வருவதாகவும் பிசிசிஐ சார்பில் அதிகாரபூர்வமாக நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. இந்திய அணியின் மருத்துவர், ஷ்ரேயஸ் ஐயருடன் சிட்னியில் இருப்பதாகவும் அவருடைய உடல்நிலை தேறி வருவதைக் கண்காணித்து வருவதாகவும் பிசிசிஐ சார்பில் தெரிவக்கப்பட்டது. இதனிடையே, ஷ்ரேயஸ் ஐயர் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண அறைக்கு வந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சிவகங்கையைச் சேர்ந்த பொது நல மருத்துவர் அ.ப. ஃபரூக் அப்துல்லா இந்தக் காயம் குறித்து விரிவாக எழுதி விளக்கியுள்ளார்.
"நமது அபிமானத்திற்குரிய ஷ்ரேயஸ் ஐயர் சனிக்கிழமை நடந்த ஆஸ்திரேலியாவுடனான சிட்னி போட்டியில் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை கேட்ச் செய்யும் போது இடறி விழுந்தார். இடறி விழுந்ததில் இடது பக்க கீழ்ப்புற நெஞ்சாங்கூட்டில் பலத்த உள் காயம் ஏற்பட அதனால் இடது பக்க கீழ்ப்புற நெஞ்சாங்கூட்டில் இருக்கும் மண்ணீரலில் கிழிவு ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை இன்று தான் அறிந்து திடுக்குற்றேன்.
மண்ணீரிலில் கிழிவு என்றால் உடனடியாக அதீத ரத்தப் போக்கு வயிற்றுக்குள்ளேயே ஏற்படும். இதன் விளைவாக, தலைசுற்றல் தலை மந்தமாக உணர்தல்
வயிற்றில் வலி ரத்த அழுத்தம் குறைதல் ஆகியவை ஏற்படும். ஷ்ரேயஸ் ஐயருக்கு மேற்கூறிய அறிகுறிகள் தோன்றவே உடனடியாக ஸ்கேன் செய்யப்பட்டு ஸ்ப்லீன் லாசிரேசன் (spleen laceration) மண்ணீரல் கிழிவு அடையாளம் காணப்பட்டது.
தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பில் இருக்கிறார். அங்கு அவருக்கு ரத்த நாளம் வழி திரவங்கள் ஏற்றப்படும் ரத்தக் கசிவு சிறுகச் சிறுக தானாக குணமாகும் வரை கண்காணிப்பில் இருப்பார். மண்ணீரல் கிழிவைப் பொருத்தவரை தீவிரமான ரத்தப் போக்குக்கு வழி வகுத்தாலோ அல்லது கிழிவு பெரிதாக இருந்தாலோ உடனடியாக அறுவை சிகிச்சை செய்து மண்ணீரல் நீக்கப்படும்.
இந்தி திரைப்பட நடிகர் அமிதாப் பச்சன் அவர்களுக்கு சண்டைக் காட்சியில் மண்ணீரல் கிழிவு ஏற்பட்டு மண்ணீரல் நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.கிழிவு சிறிதாக இருந்து ரத்தக் கசிவு நிற்காமல் இருந்தால் மண்ணீரலுக்கான ரத்த நாளத்தை அடைக்கும் எம்போலைசேசன் (EMBOLISATION) சிகிச்சை செய்யப்படும்.
கிழிவு சிறிதாக இருந்து ரத்தக் கசிவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வந்தால், சில நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு குணமாகும் வரை மருத்துவமனையில் இருக்க வேண்டும். மண்ணீரல் - ரத்தத்தை வடிகட்டும் பணியையும், கிருமிகளுக்கு எதிராக செயல்படும் வெள்ளை அணுக்களை அனுப்பி அழிக்கும் வேலை, கிருமிகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்யும் பணி, நமது ரத்தத்தின் இரும்புச் சத்தை மறு சுழற்சி செய்யும் பணி ஆகிய பல பணிகளைச் செய்து வருகிறது. எனினும் ஆபத்து காலத்தில் மண்ணீரலை நீக்கினாலும் ஒருவரால் உயிர் வாழ முடியும். ஆனால் அடிக்கடி தொற்றுக்கு உள்ளாகும் சூழ்நிலை உண்டாகலாம்.
நமது மனதுக்கு விருப்பமான ஷ்ரேயஸ் ஐயர் இந்த மருத்துவ அவசர சூழ்நிலையில் இருந்து விரைவில் மீண்டு வர மனதார பிரார்த்திப்போம். தன்னலமில்லா ஆட்டத்திற்கு சொந்தக்காரர். அணிக்காக சிறப்பான பங்களிப்பை அளித்தவர். அவர் விரைவில் மீண்டு கிரிக்கெட் விளையாடவும் வர வேண்டும் என்பதே எனது விருப்பமும் பிரார்த்தனையும். மீண்டு வா ஷ்ரேயஸ்...." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Dr. Farook Abdulla explained in Tamil about Shreyas Iyer’s unusual injury sustained during the 3rd ODI between India and Australia in Sydney.
Shreyas Iyer | Sydney ODI | IND v AUS | India v Australia |