கலக்கிய சாய் சுதர்சன்: வெற்றி நடையைத் தொடரும் குஜராத்!

முதல் ஆட்டத்தில் தோல்வி கண்ட குஜராத் டைடன்ஸ் அடுத்து விளையாடிய 4 ஆட்டங்களிலும் வெற்றி கண்டு...
கலக்கிய சாய் சுதர்சன்: வெற்றி நடையைத் தொடரும் குஜராத்!
ANI
2 min read

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைடன்ஸ் 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டியின் 23-வது ஆட்டத்தில் குஜராத் டைடன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அஹமதாபாதில் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

பவர்பிளேயில் கலக்கி வரும் ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது இரண்டாவது ஓவரில் ஷுப்மன் கில்லை போல்டாக்கினார். எனினும், விக்கெட் விழுந்த நெருக்கடியை ஏற்காமல் சாய் சுதர்சன் சிக்ஸரும் பவுண்டரியுமாக அடித்தார். 6 ஓவர்களில் 56 ரன்கள் எடுத்தது குஜராத். பவர்பிளே முடிந்தபிறகு பட்லரும் வேகத்தை அதிகரிக்க, குஜராத் ஸ்கோர் உயர்ந்தது. 10-வது ஓவரின் கடைசி பந்தில் பட்லர் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 10 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்தது குஜராத். சாய் சுதர்சனும் 32 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

இம்முறை ஷாருக் கான் முன்கூட்டியே களமிறக்கப்பட்டார். அவரும் அணியில் தக்கவைக்கப்பட்டதற்கு நியாயம் சேர்க்கும் விதமாக நடு ஓவர்களில் தூள் கிளப்பினார். சாய் சுதர்சன், ஷாருக் கான் இணை 3-வது விக்கெட்டுக்கு 34 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தது. ஷாருக் கான் 20 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட் முதல் பந்தை சிக்ஸருக்கு அனுப்பினாலும் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் எப்படி விளையாடுவார் சாய் சுதர்சன் என்று எதிர்பார்த்தபோது, சந்தீப் சர்மா பந்தில் சிக்ஸரும் பவுண்டரியும் அடித்து கலக்கினார். 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்த சாய் சுதர்சன் 19-வது ஓவரில் துஷார் தேஷ்பாண்டே பந்தில் ஆட்டமிழந்தார். ரஷித் கான் வந்த வேகத்தில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து கடமையை முடித்துக்கொண்டு கிளம்பினார். குஜராத்தும் 19-வது ஓவரில் 200 ரன்களை கடந்தது.

கடைசி ஓவரில் ராகுல் தெவாடியா ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகள் அடிக்க 20 ஓவர்களில் 217 ரன்கள் குவித்தது குஜராத். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தெவாடியா 12 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்.

குஜராத்துக்கு இம்முறை அர்ஷத் கான் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தார். யஷஸ்வி ஜெயிஸ்வால் விக்கெட்டை 6 ரன்களுக்கு வீழ்த்தினார் அர்ஷத் கான். அடுத்த ஓவரிலேயே நிதிஷ் ராணாவை வீழ்த்தினார் முஹமது சிராஜ். ரியான் பராக் வந்த வேகத்தில் சற்று மூன்று சிக்ஸர்கள் அடித்தார். 6 ஓவர்களில் 57 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான்.

குஜராத்தில் இம்பாக்ட் வீரராக கெஜ்ரோலியா களமிறங்கினார். பவர்பிளே முடிந்தவுடன் பராக் (26) விக்கெட்டை இவர் வீழ்த்தினார். அடுத்த ஓவரில் துருவ் ஜுரெலை ரஷித் கான் வீசினார். சஞ்சு சாம்சன் மற்றும் ஹெட்மயெர் கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 10 ஓவர்களில் 85 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான். கடைசி 10 ஓவர்களில் ராஜஸ்தானின் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் ஓவருக்கு 13.3.

11-வது ஓவரில் ஹெட்மயெர் ஒரு பவுண்டரியும், சஞ்சு சாம்சன் ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் அடித்தார்கள். அடுத்த ஓவரிலேயே ஹெட்மயெர் மீண்டும் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்தார். நல்ல நிலையில் சென்றுகொண்டிருந்தபோது சஞ்சு சாம்சன் 41 ரன்களுக்கு பிரசித் கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழந்தார். இம்பாக்ட் வீரராக வந்த ஷுபம் துபே 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். எல்லாப் பொறுப்பும் ஹெட்மயெர் வசம் செல்ல, 29 பந்துகளில் அரை சதம் அடித்த அவர் 52 ரன்களுக்கு பிரசித் கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழந்தார். இதே ஓவரில் ஆர்ச்சரும் ஆட்டமிழந்தார்.

19.2 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ராஜஸ்தான். முதல் ஆட்டத்தில் தோல்வி கண்ட குஜராத் டைடன்ஸ் அடுத்து விளையாடிய 4 ஆட்டங்களிலும் வெற்றி கண்டு புள்ளிகள் பட்டியலில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான் 4 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.

தமிழக வீரர் சாய் சுதர்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in