
ஐபிஎல் போட்டி அறிமுகமான 2008-ல் ஹர்பஜன் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். ஸ்ரீசாந்த் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடினார்.
யுவ்ராஜ் சிங் தலைமையிலான பஞ்சாப் அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை தோல்வியடைந்த இந்த ஆட்டத்தில் அணியை கேப்டனாக வழிநடத்தியது ஹர்பஜன் சிங்.
ஆட்டம் முடிந்த பிறகு, இரு அணி வீரர்களும் மரியாதை நிமித்தமாக கைக்குலுக்கிக் கொண்டபோது, ஸ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் அறைந்தார். இந்தக் காணொளிகள் எதுவும் அப்போது வெளியாகவில்லை. இதன் காரணமாக ஐபிஎல் 2008-ல் மீதமுள்ள ஆட்டங்களில் விளையாட ஹர்பஜன் சிங்குக்குத் தடை விதித்து அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் அறைந்த காணொளி வெளியாகியுள்ளது. மைக்கேல் கிளார்க் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த லலித் மோடி காணொளியை வெளியிட்டுள்ளார். சமூக ஊடகங்களில் இது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஷ்வரி, காணொளியை வெளியிட்டதற்குக் கடும் கண்டனங்களைப் பதிவிட்டுள்ளார்.
இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
"லலித் மோடி மற்றும் மைக்கேல் கிளார்க்கை எண்ணி வெட்கமாக உள்ளது. உங்களுடைய விளம்பரம் மற்றும் சமூக ஊடகப் பார்வைகளை ஈர்ப்பதற்காக 2008-ல் நிகழ்ந்த ஒன்றை இழுக்கிறீர்கள். நீங்கள் மனிதர்களே கிடையாது. ஸ்ரீசாந்த் மற்றும் ஹர்பஜன் சிங் இதைக் கடந்துவிட்டார்கள். இருவரும் தற்போது பள்ளி செல்லும் குழந்தைகளின் தந்தை. இது அருவருப்பானது, இதயமற்றது, மனிதச் செயலற்றது.
ஸ்ரீசாந்த் தான் எதிர்கொண்ட கடினமான காலத்துக்குப் பிறகு, தனது வாழ்க்கையை கண்ணியத்துடன் கட்டமைத்துள்ளார். அவருடைய மனைவி மற்றும் அவருடைய குழந்தைகளின் தாயாக 18 ஆண்டுகளுக்குப் பிறகு இதைப் பார்ப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது.
பல பத்தாண்டுகளுக்கு முன்பு முடிந்த கதையை, வெறும் சமூக ஊடகப் பார்வைகளை ஈர்ப்பதற்காக மீண்டும் பகிர்ந்ததன் மூலம், அச்சம்பவத்தின் அதிர்ச்சியை மீண்டும் எதிர்கொள்ள ஸ்ரீசாந்த் குடும்பம் தள்ளப்பட்டுள்ளது.
இது வீரர்களை மட்டும் காயப்படுத்தாது. அவர்களுடைய அப்பாவி குழந்தைகளையும் காயப்படுத்தும். தாங்கள் எந்தத் தவறும் செய்யாதபோதும், கேள்விகளையும் அவமானங்களையும் எதிர்கொள்ள வேண்டும்.
கீழ்த்தரமாக மனிதத்தன்மையற்று செய்துள்ள செயலுக்காக உங்கள் மீது வழக்குத் தொடுக்க வேண்டும். ஸ்ரீசாந்த் வலிமையானவர். எந்தவொரு காணொளியும் அவருடைய கண்ணியத்தை அவரிடமிருந்து பறித்துவிடாது. சுயலாபத்துக்காகக் குடும்பங்களையும் அப்பாவி குழந்தைகளையும் காயப்படுத்துவதற்கு முன்பு கடவுளை நினைத்துக்கொள்ளுங்கள்" என்று விமர்சித்துள்ளார் புவனேஷ்வர் ஸ்ரீசாந்த்.
முன்னதாக, அஸ்வின் யூடியூப் சேனலில் விருந்தினராகக் கலந்துகொண்டு அண்மையில் நேர்காணல் கொடுத்த ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் சம்பவத்துக்கு மிகுந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார். ஸ்ரீசாந்த் மகள் காயப்பட்டது குறித்தும் ஹர்பஜன் சிங் மனம் வருந்திப் பேசியிருந்தார்.
Harbhajan Singh | Sreesanth | Slapgate | Bhuvneshwari Sreesanth | IPL | Michael Clarke | Lalit Modi