ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட தினேஷ் கார்த்திக்

விக்கெட் கீப்பர் - பேட்டரான தினேஷ் கார்த்திக், அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாகத் தனது பிறந்தநாளன்று அறிவித்துள்ளார்.
ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட தினேஷ் கார்த்திக்
ANI

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் - பேட்டரான தினேஷ் கார்த்திக், அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாகத் தனது பிறந்தநாளன்று அறிவித்துள்ளார்.

இன்று, தனது 39-வது பிறந்தநாளைக் கொண்டாடும் தினேஷ் கார்த்திக், இந்திய அணிக்காகக் கடைசியாக 2022 டி20 உலகக் கோப்பையில் விளையாடினார். 2008 முதல் ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து விளையாடி வரும் அவர், அப்போட்டியிலிருந்தும் சமீபத்தில் ஓய்வு பெற்றார்.

இந்திய அணிக்காக 26 டெஸ்டுகள், 94 ஒருநாள், 60 டி20 ஆட்டங்களில் தினேஷ் கார்த்திக் விளையாடியுள்ளார். தோனியின் சமகாலத்தில் விக்கெட் கீப்பர் பேட்டராக இருந்ததால் இந்திய அணியில் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பை இழந்தார்.

2007-ல் இந்திய அணி, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தபோது தொடக்க வீரராக விளையாடிய தினேஷ் கார்த்திக், 3 டெஸ்டுகளில் 3 அரை சதங்களுடன் இந்திய அணியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். அதேபோல, 2018-ல் இலங்கையில் நடைபெற்ற நிதாஹஸ் கோப்பை இறுதிச் சுற்றில் வங்கதேசத்துக்கு எதிராகக் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து ரசிகர்களின் நினைவில் என்றென்றும் நிலைத்து நிற்கும் ஒரு சம்பவத்தை ஏற்படுத்தினார்.

தனது கிரிக்கெட் வர்ணனைக்காக ஏற்கெனவே அதிகப் பாராட்டுகளைப் பெற்றுள்ள தினேஷ் கார்த்திக், இனிமேல் அப்பணியில் முழு நேரமும் ஈடுபடுவார் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in