
இலங்கை தொடக்க பேட்டர் டிமுத் கருணாரத்னே 100-வது டெஸ்டுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இலங்கை, ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் கால் சர்வதேச மைதானத்தில் பிப்ரவரி 6 அன்று தொடங்குகிறது. இலங்கை தொடக்க பேட்டர் கருணாரத்னேவுக்கு இது 100-வது டெஸ்ட். இலங்கைக்காக 100-வது டெஸ்டில் விளையாடும் 7-வது வீரர் எனும் பெருமையை அவர் பெறவுள்ளார்.
இதையடுத்து கால் டெஸ்டுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கருணாரத்னே இன்று அறிவித்துள்ளார்.
2011-ல் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான கருணாரத்னே, 2012-ல் டெஸ்டில் அறிமுகமானார். இலங்கைக்காக இதுவரை 99 டெஸ்டுகளில் 16 சதங்களுடன் 7,172 ரன்கள் குவித்துள்ளார். பேட்டிங் சராசரி 39.40. 2015-க்குப் பிறகு, இவர் அளவுக்கு எந்தவொரு டெஸ்ட் தொடக்க பேட்டரும் ரன் குவித்ததில்லை.
இலங்கையை 30 டெஸ்டுகளில் வழிநடத்தியுள்ளார். 2019-ல் தென்னாப்பிரிக்காவில் கருணாரத்னே தலைமையில் விளையாடிய இலங்கை அணி 2-0 என டெஸ்ட் தொடரை முழுமையாக வென்று வரலாறு படைத்தது. 2019 உலகக் கோப்பையிலும் இலங்கை அணியை அவர் வழிநடத்தினார். ஒருநாள் கிரிக்கெட்டில் 50 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
36 வயதான கருணாரத்னே, கடந்த 14 மாதங்களாக டெஸ்டில் 27.05 ரன்கள் சராசரியுடன் தடுமாறிக் கொண்டிருக்கிறார். மேலும் மே 2026 வரை இலங்கை அணி இரு டெஸ்டுகளில் மட்டுமே விளையாடவுள்ளது. இதனால் வேறுவழியின்றி தற்போது 100 டெஸ்டுகள் என்கிற மைல்கல்லுடன் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.