கோப்புப்படம்
கோப்புப்படம்

யாருடையக் கால்களிலும் விழக் கூடாது என அன்று முடிவு செய்தேன்: கம்பீர்

ரசிகர்கள் நான் சிரிப்பதைப் பார்க்க வரவில்லை, வெற்றி பெறுவதைப் பார்க்கவே வருகிறார்கள் என்று வெற்றியின் முக்கியத்துவம் குறித்து கம்பீர் பேசியுள்ளார்.

தனது இளம் வயதில் அணித் தேர்வாளரின் கால்களைத் தொட்டு வணங்காததால், தனக்கு ஒருமுறை அணியில் இடம் கிடைக்கவில்லை என கௌதம் கம்பீர் மனம் திறந்து பேசியுள்ளார்.

ஐபிஎல் போட்டியை முன்னிட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பல்வேறு கிரிக்கெட் ஆளுமைகளைப் பேட்டி கண்டு வருகிறார். ஐபிஎல் தொடக்கத்தில் இருந்த விதம், தற்போது மேம்பட்டுள்ள விதம், ஸ்பிரிட் ஆஃப் தி கேம் என பல்வேறு விஷயங்கள் குறித்து வெளிப்படையாகக் கேள்வி கேட்க, விருந்தினர்களும் அவர்களுடையப் பார்வையைப் பகிர்ந்து வந்துள்ளார்கள்.

இந்தத் தொடர் பேட்டிகளின் இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆலோசகர் கௌதம் கம்பீரை அஸ்வின் நேர்காணல் எடுத்துள்ளார்.

இந்தக் காணொளி அஸ்வினின் யூடியூப் சேனலில் நேற்று வெளியானது. ஒரு கிரிக்கெட் வீரராக, வெற்றி பெறுவது மட்டுமே தனது முதல் கடமை, முன்னுரிமை என்பதை நிறைய இடங்களில் அவர் வலியுறுத்தி வந்தார். ரசிகர்கள் நான் சிரிப்பதைப் பார்க்க வரவில்லை, வெற்றி பெறுவதைப் பார்க்கவே வருகிறார்கள் என்று வெற்றியின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார்.

இந்தப் பேட்டியில், ஒரு முறை அணித் தேர்வாளரின் காலில் விழாத காரணத்தால் தன்னால் அணியில் இடம்பெற முடியவில்லை என்பது குறித்தும் கம்பீர் பகிர்ந்திருந்தார்.

"எனக்கு இன்றும் நினைவிருக்கிறது, 12, 13 வயது இருக்கும்போது 14 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் நான் இடம்பெறவில்லை. அணித் தேர்வாளரின் கால்களைத் தொட்டு வணங்காததால் நான் தேர்வு செய்யப்படவில்லை. ஒருபோதும் யாருடையக் கால்களையும் தொட்டு வணங்கக் கூடாது, யாரையும் என் கால்களைத் தொட அனுமதிக்கக் கூடாது என்பதை எனக்கு நானே அன்று உறுதியளித்துக் கொண்டேன்" என்றார் கம்பீர்.

மற்றவர்கள் தன் மீது வைத்துள்ள பார்வை, புரிதல் தன்னைத் துளியும் பாதிக்காது என்பதை வலியறுத்துவதற்காக இந்த உதாரணத்தை அவர் நினைவுபடுத்தினார்.

logo
Kizhakku News
kizhakkunews.in