எந்தப் பாதுகாப்புக் கருவியின் உதவியுமின்றி கெத்தாக, ஸ்டைலாக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்று உலகம் முழுக்கக் கவனத்தை ஈர்த்துள்ளார் துருக்கியைச் சேர்ந்த யூசுப் டிகெச். இன்று இவரைப் பற்றித்தான் உலகம் முழுக்கப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எங்களுடைய புதிய கிரஷ் என்று பெண்கள் அவர் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.
51 வயது யூசுப் டிகெச், 10 மீ. ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வழக்கமாக வீரர்கள் அணியும் காதுக்கும் கண்களுக்குமான பாதுகாப்புக் கருவிகள் எதுவுமின்றி அவர் போட்டியில் பங்கேற்றதும் ஸ்டைலான போஸில், பாக்கெட்டில் கைவைத்தபடி தப்பாமல் குறி வைத்த புகைப்படமும் ரசிகர்களை மிகவும் ஈர்த்ததால் இன்று நட்சத்திர அந்தஸ்தை அடைந்துள்ளார்.
டிகெச் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டார் என்றும் தன் நாயைத் திருப்பித் தருமாறு பதக்கம் வென்ற தருணத்தில் தன் மனைவிக்கு ஒரு தகவல் அனுப்பினார் என்றும் சமூகவலைத்தளத்தில் செய்திகள் பரவின. மெக்கானிக்கான டிகெச், விவாகரத்துக்குப் பிறகு கவனத்தைத் திசை திருப்ப துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டில் கவனம் செலுத்தியதாகவும் மற்றொரு தகவல் வெளியானது.
இவையெல்லாம் கட்டுக்கதைகளே.
2001 முதல் ஒலிம்பிக்ஸில் கலந்துகொள்ளும் டிகெச் 2008 முதல் இதுவரை 5 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அவருடைய திருமண உறவு குறித்து எத்தகவலும் வெளியாகவில்லை.
துருக்கி அணி ஒலிம்பிக்ஸில் இதுவரை துப்பாக்கிச் சுடுதலில் எந்தவொரு பதக்கமும் பெறாத நிலையில் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் டிகெச்சும் செவ்வல் இலய்டாவும் இணைந்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்கள். பதக்கம் வென்ற பிறகு இருவரும் இணைந்து ஈஃபிள் கோபுரம் முன்பு நின்று புகைப்படத்தை எடுத்துள்ளார்கள். அதுகுறித்த இன்ஸ்டகிராம் பதிவில், துருக்கி வரலாற்றில் முதல்முறையாகப் பதக்கம் வென்றுள்ளோம். எங்கள் நாட்டின் 8.5 கோடி மக்களும் எங்களை வாழ்த்தி அனுப்பினார்கள். இந்தப் பதக்கம் துருக்கிக்கே உரியது என்று கூறியுள்ளார் டிகெச்.
மேலும் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டில் டிகெச் மேற்கொள்ளும் தொழில்நுட்பம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. பாதுகாப்புக் கருவிகள் இன்றி இரு கண்களையும் திறந்துவைத்துக் கொண்டு அவர் குறி பார்த்துச் சுடுவது யாரும் செய்யாதது. இதுகுறித்து ஒரு பேட்டியில் கூறிய டிகெச், என்னுடையது அபூர்வமான தொழில்நுட்பம். நடுவர்களே என்னைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுள்ளார்கள். இந்த வருடம் நாங்கள் கடுமையாக உழைத்ததால் பதக்கம் கிடைத்தது. இந்த வெற்றி துருக்கி மக்களுக்கானது என்று அந்தப் பேட்டியில் கூறியுள்ளார். மேலும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸிலும் தானும் செவ்வல் இலய்டாவும் பங்கேற்கவுள்ளதாகவும் டிகெச் கூறியுள்ளார்.