

இந்திய மகளிர் அணி உலகக் கோப்பையை வென்றுள்ள நிலையில், பிசிசிஐ முன்னாள் தலைவர் என். சீனிவாசனின் மகளிர் கிரிக்கெட் குறித்த கருத்து இணையத்தில் மீண்டும் வலம் வந்துகொண்டிருக்கிறது.
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிச் சுற்று நவி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்திய மகளிரணி தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் ஆனது. இந்திய மகளிர் அணி உலகக் கோப்பையை முதல்முறையாக வென்றதை நாடே கொண்டாடி வருகிறது. இந்த நிலையில், பிசிசிஐ முன்னாள் தலைவர் என். சீனிவாசன், மகளிர் கிரிக்கெட் பற்றி முன்பு பேசிய பழைய கருத்து இணையத்தில் மீண்டும் வலம் வந்துகொண்டிருக்கிறது.
2017 உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹர்மன்பிரீத் கௌர் 171 ரன்கள் விளாசி இந்திய அணியை இறுதிச் சுற்றுக்கு அழைத்துச் சென்றார். இறுதிச் சுற்றில் இங்கிலாந்துக்கு எதிராகத் தோல்வியடைந்து, கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டது. இந்தச் சமயத்தில் 2017-ல் நடந்த இந்தியன் எக்ஸ்பிரஸின் நிகழ்ச்சியொன்றில் பேசிய டயானா எடுல்ஜி, பிசிசிஐ முன்னாள் தலைவர் என். சீனிவாசன் மீது குற்றம்சாட்டி பேசினார்.
1978 முதல் 1993 வரை இந்திய மகளிர் அணியின் கேப்டனாக இருந்தவர் டயானா எடுல்ஜி. இவர் கிரிக்கெட்டில் நிர்வாகப் பொறுப்புகளை வகித்திருக்கிறார்.
டயானா எடுல்ஜி கூறியதாவது:
"பிசிசிஐ தலைவராக என். சீனிவாசன் பொறுப்பேற்றபோது, வான்கடே மைதானத்தில் அவரை வாழ்த்தச் சென்றேன். அப்போது, 'என் கையில் அதிகாரம் இருந்திருந்தால், மகளிர் கிரிக்கெட்டை நடக்கவே விட்டிருக்க மாட்டேன்' என்று என். சீனிவாசன் கூறினார். மகளிர் கிரிக்கெட்டை அவர் வெறுத்தார்.
2006-ல் பிசிசிஐ கட்டுப்பாட்டுக்குள் மகளிர் கிரிக்கெட் வந்த நாள் முதல், எப்போதுமே நான் பிசிசிஐ-ஐ விமர்சிப்பவள் தான். பிசிசிஐ மிகவும் ஆணாதிக்க சிந்தனை கொண்ட அமைப்பு" என்று டயானா எடுல்ஜி அப்போது கூறினார்.
இந்திய மகளிர் அணி உலகக் கோப்பையை தற்போது வென்றுள்ள நிலையில், என். சீனிவாசன் குறித்து டயானா எடுல்ஜி கூறியது சமூக ஊடகங்களில் மீண்டும் வலம் வந்துகொண்டிருக்கிறது.
A past comment recalled by former cricketer Diana Edulji, in which N. Srinivasan allegedly said he wouldn't allow women's cricket if he had his way, has gone viral again after India’s historic World Cup triumph.
Women's World Cup | N. Srinivasan | BCCI | Diana Edulji |