தோனி அடித்த சிக்ஸர் ஆர்சிபிக்கு உதவியதா?
ANI

தோனி அடித்த சிக்ஸர் ஆர்சிபிக்கு உதவியதா?

கடைசி ஓவரில் தோனி அடித்த சிக்ஸர் மைதானத்துக்கு வெளியே சென்றதால், கடைசி 5 பந்துகளை புதிய பந்தைக் கொண்டு வீசியது ஆர்சிபி.
Published on

கடைசி ஓவரில் தோனி அடித்த சிக்ஸர் தங்களுக்குச் சாதகமாக அமைந்ததாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆர்சிபி நிர்ணயித்த 219 என்ற வெற்றி இலக்கை அடைய முடியாத போதிலும், 201 ரன்கள் எடுத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பைப் பெற்றுவிடலாம் என்ற நிலைதான் சிஎஸ்கேவுக்கு இருந்தது. ஆனால், சிஎஸ்கேவால் 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், நெட் ரன் ரேட் அடிப்படையில் ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.

இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. களத்தில் எம்எஸ் தோனி, ரவீந்திரா ஜடேஜா இருக்க, யஷ் தயல் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் ஸ்டிரைக்கில் இருந்த தோனி, யஷ் தயல் வீசிய ஃபுல் டாஸ் பந்தை ஃபைன் லெக் திசையில் 110 மீட்டர் தூரத்துக்கு சிக்ஸர் அடித்தார். இதனால், சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகமடைந்தார்கள்.

ஆனால், தோனியின் இந்த சிக்ஸர் ஆர்சிபிக்குச் சாதகமானதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தினேஷ் கார்த்திக் கூறியதாவது:

"இன்றைய ஆட்டத்தில் மிகச் சிறந்த தருணம், தோனி அந்த சிக்ஸரை மைதானத்துக்கு வெளியே அடித்ததுதான். இதனால், நமக்குப் புதிய பந்து கிடைத்தது. புதிய பந்தில் ஈரப்பதம் இல்லாததால், யஷ் தயலால் அடுத்தடுத்த பந்துகளைச் சரியாக வீச முடிந்தது" என்றார் கார்த்திக்.

தோனி சிக்ஸர் அடித்தவுடன், அடுத்த பந்தை வேகம் குறைத்து லெங்த்தில் வீசினார் யஷ் தயல். இதை ஸ்கொயர் லெக் திசையில் அடிக்க முயன்றார் தோனி. டைமிங் சரியாக அமையாததால் ஸ்வப்னில் சிங்கிடம் தோனி கேட்ச் ஆனார். மைதானத்தில் ஈரப் பதம் இருந்ததால், பந்துவீச்சாளர்களால் பந்தைச் சரியாக செயல்படுத்துவதில் சிரமம் இருந்தது. தோனியின் சிக்ஸர் மைதானத்துக்கு வெளியே சென்றதால், புதிய பந்து பயன்படுத்தப்பட்டது. புதிய பந்து என்பதால் அதில் ஈரப்பதம் இல்லை. எனவே, யஷ் தயலால் ஒப்பீட்டளவில் அடுத்தடுத்த பந்துகளைச் சிறப்பாக செயல்படுத்த முடிந்தது.

தோனியின் சிக்ஸர் மைதானத்துக்கு வெளியே செல்லாமல் இருந்திருந்தால், பழைய பந்துதான் பயன்படுத்தப்பட்டிருக்கும். அதில் ஈரப்பதம் இருந்ததால், யஷ் தயல் தனது திட்டத்தைச் செயல்படுத்துவதில் சற்று சிரமம் ஏற்பட்டிருக்கலாம் என்பது தினேஷ் கார்த்திக்கின் கருத்தாக உள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in