தோனி தோனிதான்: ஒருவழியாக சிஎஸ்கே வெற்றி!

எம்எஸ் தோனி 11 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.
தோனி தோனிதான்: ஒருவழியாக சிஎஸ்கே வெற்றி!
ANI
2 min read

லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். சிஎஸ்கேவில் அஸ்வின், கான்வே நீக்கப்பட்டு ஓவர்டன், ஷேக் ரஷீத் சேர்க்கப்பட்டார்கள். லக்னௌவில் மிட்செல் மார்ஷ் அணிக்குத் திரும்பினார்.

சிஎஸ்கேவுக்கு கலீல் அஹமது வழக்கம்போல் நல்ல தொடக்கத்தைத் தந்தார். முதல் ஓவரிலேயே எய்டன் மார்க்ரம் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 3 ஓவர்களில் 12 ரன்கள் தான் எடுக்கப்பட்டது. சிக்ஸர், பவுண்டரி அடித்த அபாயகரமான நிகோலஸ் பூரனை அன்ஷுல் கம்போஜ் வீழ்த்தினார். 6 ஓவர்களில் 42 ரன்கள் எடுத்தது லக்னௌ. ரிஷப் பந்த் தொடக்கத்தில் சற்று பழைய பந்த் போல அற்புதமாக விளையாடினார்.

மிட்செல் மார்ஷ் தடுமாற்றத்துடன் விளையாடி 30 ரன்களுக்கு ஜடேஜா பந்தில் போல்டானார். ஆயுஷ் பதோனி வேகமாக விளையாடப் பார்ததார். இவருக்கு இரு வாய்ப்புகளும் கிடைத்தன. பயன்படுத்திக்கொள்ளாமல் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இடையில் விக்கெட்டுகள் விழுந்ததாலும் சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் நன்கு கட்டுப்படுத்தியதாலும் லக்னௌவின் ரன் வேகம் குறைந்தது. பந்த் வேகமும் குறைந்தது. 17 ஓவர்கள் முடிவில் 121 ரன்கள் எடுத்தது. நூர் அஹமது விக்கெட் எடுக்காவிட்டாலும் 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

பதிரனா வீசிய 18-வது ஓவரில் இரு சிக்ஸர்கள் அடித்த ரிஷப் பந்த் 42 பந்துகளில் அரை சதம் அடித்தார். 19-வது ஓவரை வீசிய கலீல் அஹமதும் இரு சிக்ஸர்கள் கொடுத்தார். 150 ரன்களை கடந்தது லக்னௌ. பந்த் கடைசி ஓவரில் 63 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அப்துல் சமத் 20 ரன்களுக்கு தோனியின் அற்புதமான ரன் அவுட்டில் ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் லக்னௌ அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது.

167 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ரச்சின் ரவீந்திரா மற்றும் ஷேக் ரஷீத் தொடக்க பேட்டர்களாக களமிறங்கினார்கள். சிஎஸ்கேவிடமிருந்து இதுவரை வெளிப்படாத முனைப்பு இன்று அட்டகாசமாக வெளிப்பட்டது. முதல் ஓவரிலேயே ரச்சின் ரவீந்திரா இரு பவுண்டரிகள் அடித்தார். இளம் ரஷீத் 2-வது ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்தார். அடுத்த ஓவரில் இருவரும் சேர்ந்து மூன்று பவுண்டரிகள் அடிக்க சிஎஸ்கே 3 ஓவர்களில் 37 ரன்கள் எடுத்தது. நல்ல தொடக்கத்தைத் தந்த ரஷீத் 19 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து பவர்பிளேயில் ஆட்டமிழந்தார். 6 ஓவர்களில் சிஎஸ்கே 59 ரன்கள் எடுத்தது.

சுழற்பந்துவீச்சு வந்தவுடன் சிஎஸ்கே தடுமாறியது. 37 ரன்கள் எடுத்த ரச்சின் ரவீந்திரா, மார்க்ரம் பந்தில் ஆட்டமிழந்தார். ராகுல் திரிபாதி மீண்டும் ஏமாற்றமளித்து 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ரவீந்திர ஜடேஜா முன்கூட்டியே களமிறக்கிவிடப்பட்டதும் பலன் தரவில்லை. இவரும் பிஷ்னாய் பந்தைத் தூக்கி அடிக்கப் பார்த்து ஆட்டமிழந்தார். 6-வது முதல் 13-வது ஓவர் வரை சிஎஸ்கே வெறும் இரு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்தது. விஜய் ஷங்கரும் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கடைசி 5 ஓவர்களில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு 56 ரன்கள் தேவை என்ற கடினமான நிலை உருவானது.

ஷிவம் துபே தடுமாறி வருவதை உணர்ந்த எம்எஸ் தோனி இம்முறை நேரம் எடுத்துக்கொள்ளாமல் வந்த வேகத்தில் முதல் 6 பந்துகளில் இரு பவுண்டரிகள் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். கடைசி 3 ஓவர்களில் 31 ரன்கள் தேவை என்று நிலைமை ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்தது.

கடைசி இரு ஓவர்களில் 24 ரன்கள் தேவைப்பட, ஷார்துல் தாக்குர் 19-வது ஓவரை வீசினார். பவுண்டரி, சிக்ஸருடன் துபே ஓவரை தொடங்கி வைக்க, பவுண்டரியுடன் ஓவரை நிறைவு செய்தார் தோனி. கடைசி ஓவரில் 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. கடைசி 5 ஓவர்களில் ஏதேனும் ஒரு ஓவரை ரவி பிஷ்னாய் வீசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி ஓவரையும் அவேஷ் கான் தான் வீசினார். 3-வது பந்தில் பவுண்டரி அடித்த துபே சிஎஸ்கே வெற்றியை உறுதி செய்தார்.

19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்த சிஎஸ்கே 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த துபே 37 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார், எம்எஸ் தோனி 11 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். துபே - தோனி இணை 28 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தது.

தொடர்ச்சியாக 5 தோல்விகளுக்குப் பிறகு சிஎஸ்கே பெற்றுள்ள முதல் வெற்றி இது. இரு புள்ளிகளைப் பெற்றாலும், நெட் ரன்ரேட் அடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் தான் உள்ளது சிஎஸ்கே.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in