
காயம் காரணமாக ஐபிஎல் 2025 போட்டியிலிருந்து ருதுராஜ் கெயிக்வாட் விலகுவதால், சிஎஸ்கே கேப்டனாக எம்.எஸ். தோனி செயல்படுவார் என்று அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே - கேகேஆர் அணிகளுக்கிடையிலான ஆட்டம் நாளை (ஏப். 11) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டம் தொடர்பாக இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் கூறியதாவது:
ருதுராஜுக்கு முழங்கையில் அடிபட்டிருக்கிறது. காயம் குணமாகாததால் ஐபிஎல் 2025 போட்டியிலிருந்து ருதுராஜ் விலகியுள்ளார். இதையடுத்து சிஎஸ்கே அணியை தோனி வழிநடத்துவார் என்று கூறினார்.
தில்லி அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தின்போதே டந்த ஆட்டத்தின்போதே காயம் காரணமாக ருதுராஜ் விளையாட மாட்டார், அணியை தோனி வழிநடத்துவார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த ஆட்டத்திலும், அதற்குப் பிறகு நடைபெற்ற பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்திலும் ருதுராஜ் விளையாடினார். இந்நிலையில் காயம் காரணமாக இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்தே அவர் விலக நேர்ந்துள்ளது.
ஐபிஎல் 2025-ல் சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களில் 4-ல் தோற்றுள்ளது. எனினும் அணியின் கேப்டனாக 43 வயது தோனி மீண்டும் நியமிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே குஷியை ஏற்படுத்தியுள்ளது. தோனி தலைமையில் சிஎஸ்கே அணி 2010, 2011, 2018, 2021, 2023 என 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளது.