இஷான் கிஷன் சிக்ஸர் மழை: சன்ரைசர்ஸ் அதிரடி வெற்றி

சொந்த மண்ணில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் இம்முறையும் எதிரணிக்கு அச்சமூட்டும் அணியாகக் காட்சியளிக்கிறது.
இஷான் கிஷன் சிக்ஸர் மழை: சன்ரைசர்ஸ் அதிரடி வெற்றி
ANI
1 min read

ஐபிஎல் போட்டியில் இன்றைய பகல் நேர ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஹைதராபாதில் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதல் ஓவரில் அபிஷேக் சர்மா இரு பவுண்டரிகள் அடித்து அதிரடியைத் தொடங்கி வைத்தார். டிராவிஸ் ஹெட்டும் அவருடன் இணைந்து சிக்ஸர்களை நொறுக்கினார்.

தீக்‌ஷனா பந்தில் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் அபிஷேக் சர்மா. அடுத்து வந்த இஷான் கிஷனும் சன்ரைசரஸ் பாணியில் அதிரடியாக விளையாடினார். பவர்பிளே முடிவில் சன்ரைசர்ஸ் 94 ரன்கள் குவித்தது.

எல்லோருக்கும் தலைவலியைக் கொடுக்கும் டிராவிட் ஹெட் 21 பந்துகளில் அரை சதம் அடித்தார். சிஎஸ்கேவிலிருந்து சென்ற துஷார் தேஷ்பாண்டே ஹெட்டை 67 ரன்களுக்கு வீழ்த்தினார். 10 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்து மிகப் பெரிய ஸ்கோருக்குத் தயாராக இருந்தது சன்ரைசர்ஸ்.

ஆர்ச்சர் ஓவரில் 3 சிக்ஸர்களை அடித்த இஷான் கிஷன் 25 பந்துகளில் அரை சதம் அடித்தார். அதிரடிக்கு நடுவே நிதிஷ் குமார் ரெட்டி 30 ரன்களுக்கு தீக்‌ஷனா சுழலில் வீழ்ந்தார்.

15 ஓவர்களில் சன்ரைசர்ஸ் 208 ரன்கள் எடுத்திருந்தது. முதல் 50 ரன்களை 25 பந்துகளில் எட்டிய இஷான் கிஷன், அடுத்த 50 ரன்களை 20 பந்துகளில் எட்டி 45 பந்துகளில் சதம் அடித்து ஐபிஎல் 2025 போட்டியை அமர்க்களமாகத் தொடங்கியுள்ளார். சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 286 ரன்கள் குவித்தது.

இஷான் கிஷன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 106 ரன்கள் எடுத்தார். 4 ஓவர்களில் 76 ரன்கள் கொடுத்த ஆர்ச்சர், ஐபிஎல் போட்டியில் ஓர் ஆட்டத்தில் அதிக ரன்கள் கொடுத்தவர் என்கிற மோசமான சாதனையைப் படைத்தார்.

ராஜஸ்தானுக்கு இம்பாக்ட் வீரராகக் களமிறங்கிய சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினாலும் சிஎஸ்கேவிலிருந்து சென்ற சிமர்ஜீத் சிங் ஓவரில் ஜெயிஸ்வாலும் ரியான் பராக்கும் ஆட்டமிழந்தார்கள். நிதிஷ் ராணா ஆட்டமிழந்தவுடன் களமிறங்கிய துருவ் ஜுரெல் வந்தவுடனே கம்மின்ஸ் ஓவரை நொறுக்கினார்.

6 ஓவர்களில் 77 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான். சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் அரை சதம் அடிக்க, 10 ஓவர்களில் ராஜஸ்தான் 108 ரன்கள் எடுத்தபோதே ஆட்டத்தின் முடிவு தெரிந்துவிட்டது. எனினும் கடைசி 10 ஓவர்களில் ராஜஸ்தான் பேட்டர்கள் போராடினார்கள்.

சிமர்ஜீத் சிங் ஓவரில் 3 சிக்ஸர்களை அடித்த துருவ் ஜுரெல் 28 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

66 ரன்களில் சஞ்சு சாம்சனும் 70 ரன்களில் ஜுரெலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள்.

ஷுபம் துபே, ஹெட்மையரின் கடைசி நேர அதிரடி ஆட்டம் பலனளிக்கவில்லை. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணியால் 242 ரன்கள் மட்டுமே எடுத்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சொந்த மண்ணில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் இம்முறையும் எதிரணிக்கு அச்சமூட்டும் அணியாகக் காட்சியளிக்கிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in